டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து தெருநாய்களை அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதை தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். நாய்கள் இல்லாத தெருக்களை உருவாக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, டில்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் மற்றும் பரிதாபாத் ஆகிய இடங்களில் 6 முதல் 8 வாரங்களில் 5 ஆயிரம் நாய்களை காப்பகத்திற்கு மாற்ற வேண்டும். உடனடியாக பிடிக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவால் பணப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட டில்லி மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு ரூ.11 கோடி செலவாகும் என மாநகராட்சியின் முதற்கட்ட மதிப்பீடு தெரிவிக்கிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
உணவு, போக்குவரத்து, சுத்தம் செய்தல், மருத்துவ பராமரிப்பு மற்றும் வேலையாட்களுக்கு சம்பளம் என ஒரு நாய்க்கு தினமும் ரூ.110 செலவாகும்.
டில்லியில் உள்ள 10 லட்சம் தெருநாய்கள் அனைத்தும் காப்பகங்களுக்கு மாற்றப்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.11 கோடி செலவாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது டில்லி மாநகராட்சி தினமும் 350க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து கருத்தடை செய்து, 10 நாள் கண்காணிப்புக் காலத்திற்கு பிறகு விடுவிக்கிறது. கருத்தடை செயல்முறைக்கு ஒரு நாய்க்கு ரூ.ஆயிரம் செலவு ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.