கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி கோவையில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண் ஒருவர், விமானத்தில் குடிபோதையில் இருந்த மூன்று ஆண் பயணிகள் கூச்சலிட்டுக் கொண்டே இருந்ததாக புகார் கூறியுள்ளார். சென்னையில் தரை இறங்கிய பிறகும் அவர்கள் தன்னை துன்புறுத்தினர் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலைய போலீசாரிடம் அளித்த புகாரில் இண்டிகோ விமான நிறுவன எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து போலீசார் கூறியதாவது: பெண் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை விமான நிலைய போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். அவர் புகார் அளித்த ஆண் பயணிகளிடமும் விசாரணை நடத்தினோம்.
தேவைப்பட்டால், மேலும் விசாரணைக்காக நாங்கள் ஒரு வழக்கைப் பதிவு செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: இந்தப் பிரச்னை குறித்து விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பயணியின் பிரச்னையை சரி செய்ய நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.
எந்தவொரு விதமான இடையூறு விளைவிக்கும் நடத்தைக்கும் இண்டிகோ நிறுவனம் கடும் நடவடிக்கை எடுக்கும். எங்கள் அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மரியாதைக்குரிய சூழலை உறுதி செய்வதில் இண்டிகோ விமான நிறுவனம் உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பெண் பயணி தங்களிடம் புகார் கூறியதும், அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த மூன்று பயணிகளிடம் அமைதியாக இருக்கும்படி தாங்கள் அறிவுரை கூறியதாக இண்டிகோ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.