இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் சர்வதேசப் புகழ் பெற்றிருந்த போதிலும் எதிர்பார்த்த அளவிற்கு அதன் ஏற்றுமதி வளர்ச்சி அடையவில்லை. எனவே சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையை வெற்றி கொள்ளும் வகையில் நிலையான கொள்கைகளை வகுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் “Gem City Ratnapura- 2025” எனும் தலைப்பில் வெள்ளிக்கிழமை (15), சனிக்கிழமை (16), ஞாயிற்றுக்கிழமை (17), ஆகிய மூன்று நாட்கள் பெல்மடுல்ல கிராண்ட் சில்வரே விடுதியில் நடைபெறும் சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி 2025-இன் தொடக்க விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் இக்கண்காட்சியில் கலந்துகொண்டிருக்கும் அமெரிக்கா இந்தியா சீனா சுவிட்சர்லாந்து தாய்லாந்து பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அரசாங்கத்தின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து எதிர்காலத்திலும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் ஏற்றுமதி நடவடிக்கைகளில் இணைந்து கொள்ளுமாறு அந்நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி இலங்கையை உலகின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையாக நிலைநிறுத்தும் நோக்குடன் பல்வேறு வகையான இரத்தினக்கற்கள் ஆபரணங்கள் அகழ்வு மற்றும் பதப்படுத்தும் முறைகள் ஆய்வக சேவைகள் களப்பயிற்சி மற்றும் கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பிரதமர் மேலும் கூறியதாவது:
இலங்கை இரத்தினக்கற்கள் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றிருக்கின்றன.அத்துடன் இந்த இரத்தினக்கற்களில் பெரும் பகுதி இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்தே கிடைக்கின்றன.
எனினும் இரத்தினபுரிக்கு அந்த கௌரவம் கிடைத்துள்ளதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.உயர்தர இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினக்கல் துறை தேசிய பொருளாதாரத்திற்கு அளிக்கும் பங்களிப்பு மிகப் பெரியது.
இருப்பினும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையிலிருந்து உள்ளூர் ஏற்றுமதி வருமானத்திற்கு நாம் அளிக்கக்கூடிய உச்சபட்ச பங்களிப்பினை இன்னும் அடையவில்லை.
பொருத்தமற்ற கொள்கைகளே இத்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வருகின்றன. ஆகையால் இரத்தினக்கல் துறையின் இலக்கு ஏற்றுமதி வருமானத்தை ஈட்டத் தேவையான நிலையான கொள்கைகளை உருவாக்க எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றார்.