கர்நாடக மாநிலம், பெங்களூரில் தெருநாய்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றுக்கு சரியான உணவு இல்லாததால் தான், மனிதர்களை கடிக்கிறது என்ற வாதங்கள் எழுந்தன.

இதையடுத்து, தெருநாய்களுக்கு சிக்கனுடன் சாப்பாடு வழங்க, 2.88 கோடி ரூபாய் செலவில் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக பெங்களூரு மாநகராட்சி அறிவித்தது.
இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ‘நாய்கள் சிக்கன் சாப்பிடுவதற்கு, கோடி கணக்கில் நிதி ஒதுக்குவதா’ என பலரும் விமர்சித்தனர். இதனால், இத்திட்டத்தில் இருந்து மாநகராட்சி பின்வாங்கியது.
தற்போது, அடுத்த கட்டமாக, தெருநாய்களை கட்டுப்படுத்த, பயிற்சியாளர்களை நியமிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதன்படி, தெருநாய்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள பகுதிகளில், போலீஸ் துறையில் நாய் பயிற்சியாளராக இருந்தவர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள், நாய்களுக்கு பயிற்சி அளிப்பர்.
இதன் மூலம் நாய்கள், மனிதர்களை தாக்குவது குறையும். பயிற்சியாளர்களுக்கு ஒரு நாளைக்கு, 233 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இப்படி, வித விதமாக மாநகராட்சி யோசித்தாலும், இதன் வாயிலாக தெருநாய்களை கட்டுப்படுத்த முடியுமா என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.