அனல், நீர் உள்ளிட்ட மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், 400 கிலோ வோல்ட், 230, 110, 33/ 11 கிலோ வோல்ட் திறன் துணை மின் நிலையங்களுக்கு, அதே திறன் உடைய மின் வழித்தடங்கள் வாயிலாக, பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது.

சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமின்றி, மாநிலம் முழுதும் நகரமயமாக்கல் அதிகம் உள்ளது. அதற்கு ஏற்ப, அனைத்து பகுதிகளிலும் மின் தேவை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் உள்ள மின் வழித்தடங்களில், ‘ஓவர்லோடு’ காணப்படுகிறது என்ற விபரத்தை, மத்திய மின்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, கடலுார் மாவட்டம் நெய்வேலி, செங்கல்பட்டு களிவந்தப்பட்டு, திருப்பூர் உடுமலைப்பேட்டை, கோவை அரசூர், சேலத்தில் செல்லும், 400 கிலோ வோல்ட் வழித்தடங்களிலும் மற்றும் சென்னை, கடலுார் நெய்வேலி, கோவை, துாத்துக்குடி, மதுரை, ஓசூரில் செல்லும், 230 கி.வோ., வழித்தடங்களிலும், ‘ஓவர்லோடு’ எனப்படும் அதிக மின் பளு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், திருச்சி மாவட்டத்தில், ‘லோ வோல்டேஜ்’ எனப்படும் குறைந்த மின்னழுத்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய மின் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எதிர்கால மின் தேவையை பூர்த்தி செய்ய, சென்னை உட்பட பல்வேறு இடங்களிலும் புதிய துணை மின் நிலையங்களும், மின் வழித்தடமும் அமைக்கப்பட்டு வருகின்றன. மத்திய மின் துறை தெரிவிக்கும் இடங்களில், புதிய மின் வழித்தடங்கள் அமைக்கவும், அங்குள்ள துணை மின் நிலையங்களில் கூடுதல் மின்சாரத்தை கையாளவும் புதிய பவர் டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்படுகின்றன’ என்றார்.