ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் நேற்று பேசினார். அப்போது, உக்ரைன் விவகாரம், மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இதுகுறித்து இந்திய பிரதமர் மோடி, தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘என் நண்பர் அதிபர் மேக்ரானுடன் மிகச்சிறந்த உரையாடலை நடத்தினேன்.
‘உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடக்கும் மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.
‘இந்தியா- – பிரான்ஸ் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான எங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம்’ என, தெரிவித்துள்ளார்.
அதே போல், இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான வலுவான உத்தரவாதங்களுடன், நீடித்த அமைதியை நோக்கி நகர்வதற்காக, உக்ரைன் போர் குறித்த நிலைப்பாடுகளை பகிர்ந்து கொண்டோம்.
வர்த்தக பிரச்னைகளில், அனைத்துத் துறைகளிலும் எங்கள் பொருளாதார பரிமாற்றங்களையும், கூட்டாண்மையையும் வலுப்படுத்த ஒப்புக் கொண்டோம். இதுவே, எங்கள் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கான திறவுகோல்.
கடந்த பிப்ரவரியில், பாரிஸ் நகரில் நடந்த ஏ.ஐ., செயல் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, 2026-ல் டில்லியில் நடக்கவுள்ள அதன் உச்சி மாநாட்டின் வெற்றியை நோக்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
பிரான்ஸ் தலைமையில் நடக்கவுள்ள, ‘ஜி – 7’ உச்சி மாநாட்டிற்கும், 2026-ல் இந்தியா தலைமையில் நடக்கவுள்ள, ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டிற்குமான ஏற்பாடுகளில் இணைந்து பணியாற்ற உறுதியேற்றோம். – இவ்வாறு அவர் கூறியுள்ளார்.