”கொடுத்த வாக்குறுதிகளை மறப்பதே முதல்வர் ஸ்டாலினுக்கு வழக்கம். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று,” என்று நெல்லையில் நடந்த பாஜ பூத் கமிட்டி மாநாட்டில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.

தமிழகத்தில் மண்டலங்கள் தோறும் பூத் கமிட்டி மாநாடு நடத்த பா.ஜ.,திட்டமிட்டுள்ளது. முதல் மாநாடு இன்று திருநெல்வேலியில் நடந்தது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து விமானத்தில் அமித் ஷா துாத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை சென்றடைந்தார். அங்கிருந்து காரில் கிளம்பி தச்சநல்லுார் மாநாட்டு மேடைக்கு வந்தார். பின்னர் நடந்த மாநாட்டில் தலைவர்கள் பேசினர்.
இந்த மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது: சண்டை என்று வரும்போது படைத்தளபதிகள் முன்னின்று சண்டை நடத்துவார்கள். பாஜவின் பூத் தலைவர்கள் பூத் பொறுப்பாளர்கள் அந்த சண்டையின் முன்புறம் இருக்கும் தலைவர்கள். 2026 சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை ஏன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சொல்வதில் முதல் பங்கு உங்களுக்கு உண்டு.
பிரதமர் மோடி 12 ஆண்டுகளாக தொடர்ச்சியாக உழைத்து வருகிறார். அடுத்த 8 மாதம் பிரதமர் மோடிக்காக, கட்சிக்காக உழைக்க வேண்டிய பொறுப்பு பூத் பொறுப்பாளர்களுக்கு உண்டு. திமுக ஆட்சியை அகற்றிவிட்டு, தேஜ கூட்டணியை ஆட்சியை இபிஎஸ்சை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு தேஜ கூட்டணியின் ஒவ்வொரு தொண்டருக்கும் உண்டு. அதனை வெற்றிகரமாக செய்து முடித்து காட்ட வேண்டும். 4 ஆண்டுகாலம் மிகக் கடுமையாக உழைத்துள்ளோம். திமுக ஆட்சி வந்த பிறகு பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாக பாஜ நின்றுள்ளது.
பாஜவின் நபர்கள் கைது செய்து சிறை சென்றுள்ளோம். மக்களுக்காக போராட்டம் நடத்தி உள்ளோம். 14 முதல் 30 நாள் சிறையில் இருந்துள்ளீர்கள். இந்த 8 மாத காலம் இந்த உழைப்புக்கு ஊதியமாக கடுமையாக உழைத்து தேஜ கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.
முதல்வர் ஸ்டாலினுக்கு எதை பார்த்தாலும் பயம். எதை பார்த்தாலும் பயந்து கொண்டு உள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்த சட்டத்தை பார்த்து பயம். எதை பார்த்தாலும் பயந்து கொண்டு இருக்கும் முதல்வரை நிரந்தரமாக பயமில்லாமல் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு உள்ளது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:அமித்ஷா இதே இடத்தில் 2021 சட்டசபை தேர்தலின் போது எனக்காக பிரசாரம் செய்தார். அன்றைக்கு வெற்றி பெற்றோம். இன்று அவரின் கனவு எல்லாம். 5 ஆண்டுக்கு முன்பு பாஜவுக்கு டிவி வேண்டும் என்றோம். ஆனால், பூத் கமிட்டியை போய் பாருங்கள் என்றார்.தமிழகத்தில் இன்னும் 7 இடங்களில் பூத் கமிட்டி நடக்க உள்ளது. அடுத்து கொங்கு மண்டலத்தில் நடைபெற உள்ளது.
அங்கு சிறப்பாக செய்வார்கள் என நம்புகிறேன். தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடக்கிறது. பாலியல் வன் கொடுமை நடக்கும் ஆட்சி. 10 வயது குழந்தை முதல் 70 வயது வரை வயதான பெண்கள் நடமாட முடியவில்லை. 2 நாட்களுக்கு முன்பு, கரூரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் விஏஓவை அடித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 லாக்கப் மரணம் நடக்கிறது. ஆனால், முதல்வர் சாரி சொல்கிறார். கொலை செய்துவிட்டு சாரி கொல்கிறார்.கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம். இது தான் திமுக ஆட்சியின் லட்சணம்.
திமுக ஆட்சி குடும்ப ஆட்சி. பாஜ ஆட்சி மக்களுக்கான ஆட்சி. அமித்ஷா ஆட்சி. மக்களிடம் போய் கேட்டுப்பாருங்கள். ஆனால் திராவிட மாடல் அரசு, திராவிட மாடல் அரசு என சொல்கிறார்கள். ஆனால் மக்கள் டிஸாஸ்டர் மாடல் ஆட்சி என சொல்கின்றனர். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். இதற்காக உருவாக்கிய கூட்டணி தேஜ. இதனை உருவாக்கியது அரசியல் சாணக்கியன் அமித்ஷா. நிச்சயம் வெற்றி பெறுவோம். சந்தர்ப்பம் இல்லை. இது சந்தர்ப்பவாத கூட்டணி என ஸ்டாலின் சொல்கிறார்.
1999 லோக்சபா தேர்தலில் பாஜ உடன் கூட்டணி வைத்தீர்களே அது சந்தர்ப்பவாதம் இல்லையா.இன்று கவர்ச்சியுடன் கட்சி ஆரம்பித்துள்ளனர். 2026 ல் தேஜ கூட்டணி வெற்றி பெறக்கூடிய ஆட்சியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த போர் தர்மத்துக்கும் அதர்மத்துக்குமான போர் . நீதிக்கும் அநீதிக்குமான போர். இந்த போரில் தர்மம் வெற்றி பெற வேண்டும். வென்றாக வேண்டும். பூத் கமிட்டி ஒவ்வொரு பொறுப்பாளரும் தொண்டரும் சபதம் ஏற்க வேண்டும். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். இனிமேல் வரும் 8 மாதங்கள் தான் உங்களின் ஒவ்வொரு பொறுப்பும் நிச்சயம் உள்ளது. இந்த பொறுப்பை திறம்பட செய்ய வேண்டும்.
2021 ல் திமுக ஏராளமான வாக்குறுதி கொடுத்தது. அதனை திமுக நிறைவேற்றவில்லை. வாக்குறுதி எண்ணிக்கை அதிகரித்து கொண்டுள்ளது.சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆக உள்ளார். ஆனால், தமிழுக்காக நாங்கள் தான் எல்லாம் செய்தோம் என ஸ்டாலின் கூறுகிறார்.
நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு.காஸ் மானியம், பெட்ரோல் கட்டணம், கல்விக்கட்டணம், தூய்மைப்பணியாளர்களை நிரந்தரமாக்குவோம். அரசு பணியிடங்களை நிரப்புவோம் என கொடுத்த வாக்குறுதி என்னாச்சு. சொத்துவரி என்னாச்சு. தமிழகத்தில் மின்கட்டனத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது. முதல்வருக்கு வாக்குறுதி கொடுப்பது வழக்கம், தேர்தல் முடிந்து அதை மறப்பது அவரது பழக்கம். எத்தனை காலம் தான் தமிழகத்தை ஏமாற்ற முடியும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.
தொடர்ந்து அமித் ஷா பேசினார்.அவர் பேசியபிறகு மாநாடு நிறைவடைந்தது. அமித் ஷா, நெல்லையில் இருந்து துாத்துக்குடிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச்சென்றார். அங்கிருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்.