பூடானில், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடக்கிறது. இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, கோப்பை வெல்லும்.

முதல் போட்டியில் நேபாளத்தை வென்ற இந்தியா, நேற்று வங்கதேசத்தை சந்தித்தது. போட்டியின் 15வது நிமிடத்தில் சக வீராங்கனை கொடுத்த பந்தை பெற்ற இந்தியாவின் பியர்ல், அப்படியே கொண்டு சென்று, கோல் வலைக்குள் தள்ளினார்.
வங்கதேச கோல் கீப்பர் தடுக்க முயன்ற போதும், பந்து அவர் மீது பட்டு உள்ளே சென்று கோலாக மாறியது. முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில், 75வது நிமிடத்தில், இந்தியாவுக்கு ‘கார்னர் கிக்’ கிடைத்தது. இதில் பந்தை துல்லியமாக கோல் ஏரியாவுக்குள் அனுப்பினார் அலிசா. அங்கு வந்த மாற்று வீராங்கனை போனிபிலியா, வலைக்குள் தள்ள கோலாக மாறியது. முடிவில் இந்திய அணி 2-0 என, இத்தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது. நாளை மூன்றாவது போட்டியில் இந்திய அணி, பூடானை சந்திக்க உள்ளது.