ராகமை, கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தில் 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் அம்பாறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (22.08.2025) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் ஹோகந்தர மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 மற்றும் 42 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து 8 கிலோ 168 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 666 கிராம் ஐஸ் போதைப்பொருள், 3 இலத்திரனியல் தராசுகள், 4 கையடக்கத் தொலைபேசிகள், 6 போலி வாகன இலக்கத்தகடுகள், கார் ஒன்று, வேன் ஒன்று, முச்சக்கரவண்டி ஒன்று மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட இருவரும் வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் தலைமையில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்து போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.