சுவிஸ் தமிழர் இல்லம் 22 ஆவது தடவையாக அனைத்துலக ரீதியில் மிகப் பிரமாண்டமாக நடத்திய தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா இம்மாதம் 09ஆம் 10ஆம் திகதிகளில் ( சனி, ஞாயிறு) நடைபெற்றது.

சூரிச் மாநிலம் வின்ரத்தூரிலுள்ள Sportanlage Deutweg and Talgut மைதானத்தில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழா இரு தினங்களும் தமிழீழ தேசியக்கொடி, சுவிஸ் நாட்டின் கொடி, விளையாட்டுத்துறை மற்றும் தமிழர் இல்லக் கொடிகள் ஏற்றப்பட்டு அகவணக்கம், ஒலிம்பிக் தீபம், சத்தியப்பிரமாணத்துடன் எழுச்சிகரமாக ஆரம்பிக்கப்பட்டன.
வழமைபோல் இவ்வருடமும் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளமான விளையாட்டு அணிகள் ஆர்வத்துடன் களமிறங்கின.
ஆண்கள், பெண்களுக்கான உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம், கிளித்தட்டு முதலான குழு விளையாட்டுக்களும், இளையோருக்கான தடகளப்போட்டிகளும் இடம்பெற்றன. இவற்றுடன் சங்கீதக்கதிரை, பார்வையாளர்களுக்கான தடகளப்போட்டிகள் கண் கட்டி அடித்தல் போன்றனவும் வெகு சிறப்பாக நடைபெற்றன.
வளர்ந்தோர் உதைபந்தாட்ட இறுதிப்போட்டி சனியன்று இரவு பிரதான மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். போட்டிகளில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற அணிகளுக்கு பெறுமதி வாய்ந்த வெற்றிக்கிண்ணங்கள், பதக்கங்கள் என்பன வழங்கப்பட்டன. மைதானத்தில் மின்திரை அமைக்கப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
முதலாம் நாள் ஆரம்ப நிகழ்வின் போது , கடந்த மாதம் பிரித்தானியாவில் நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான இரண்டாவது ஆசியக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து உலகத்தமிழ் மக்களை பெருமைப்படுத்திய தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணிக்கு சுவிஸில் இருந்து தெரிவாகி சிறப்பாக விளையாடிய செல்வன் சரணியன் சனியன்று ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
இரண்டாம் நாள் நிகழ்வுகளை தாயகத்திலும் சுவிஸ் நாட்டிலும் கரப்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் கடல் பறவைகள் மற்றும் VBC லங்கேந்தால் அணியின் சிறந்த விளையாட்டு வீரரான திரு சிவசுப்ரமணியம் பால்ராஜ் அவர்கள் ஏற்றி வைத்தார்.
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் இளையோர்களை விளையாட்டுத்துறையில் மேம்பாடடையச் செய்வதோடு, அவர்கள் மத்தியில் தாயகம் குறித்த புரிதலை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டே தமிழர் விளையாட்டு விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
வழமையை விட இவ்வருடம் மிக அதிக அளவில் புதிய அணிகள் பங்கேற்றன. இது புலத்திலுள்ள தமிழ் இளையோர் மத்தியில் விளையாட்டுத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருப்பதையே வெளிப்படுத்துகிறது.




