கோவையில் கல்லூரி மாணவர்கள் பலர் கஞ்சா பயன்படுத்துவதாகவும், தனியார் விடுதிகளில் அவற்றை விற்பனை செய்வதாகவும், சிலர் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி செயல்களில் ஈடுபடுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்தகைய நபர்களை பிடிக்கும் நோக்கத்துடன் கோவை செட்டிபாளையம் அடுத்த மலுமிச்சம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதி அறைகளில் இன்று அதிகாலை முதல் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது போலீசாரை அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா, குட்கா, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவை மாணவர்கள் விற்பனை செய்து வந்தது தெரிந்தது. ஏராளமான ஆயுதங்களும் மாணவர்களின் அறைகளில் சிக்கின.
கஞ்சா விற்பனைக்காக ‘யுபிஐ’ மூலம் பணம் வசூலித்ததும் விசாரணையில் அம்பலம் ஆனது.இது தொடர்பாக சில மாணவர்களை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், கோவில்பாளையம், செட்டிபாளையம் மதுக்கரை ஆகிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். மாவட்டம் முழுதும் 90 குழுவினர் அமைக்கப்பட்டு, 412 போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அனைத்து விடுதிகளிலுமே கஞ்சா புழக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. மாணவர்களுக்கு எங்கிருந்து சப்ளை செய்யப்படுகிறது என்பது பற்றி போலீசார் தோண்டித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.