ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த முல்லைத்தீவு கோட்டை, அந்நியப் படையெடுப்புகளை எதிர்த்து வீரப்போர் நடத்திய பண்டாரவன்னியன் தலைமையிலான படைகளால் 1803ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் திகதி கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு இடம்பெற்று 222 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று, மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பண்டாரவன்னியனின் வெற்றியை குறிக்கும் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) சி.குணபாலன், மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) ஜெயகாந், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் சற்குணேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஜி.ஜெயரஞ்சினி உட்பட மாவட்ட செயலக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட செயலக வளாகத்தில் தற்போது அழிவடைந்த நிலையில் காணப்படும் முல்லைத்தீவு கோட்டையானது ஒல்லாந்தரால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.
1715ஆம் ஆண்டில் மரத்தாலும் மரவேலிகளாலும் இக்கோட்டை நிறுவப்பட்டது. 1721ஆம் ஆண்டில் நாற்பக்கல் வடிவில் இக்கோட்டை ஒல்லாந்தரால் கட்டப்பட்டது. பின்னர், பிரித்தானியரால் இக்கோட்டை 1795ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டது. அடுத்து, 1803 ஆகஸ்ட் 25ஆம் திகதி பண்டாரவன்னியனால் இக்கோட்டை கைப்பற்றப்பட்டு இடிக்கப்பட்டமை வரலாற்றுப் பதிவாகிறது.
