இது தொடர்பாக விசாரணை நடத்திய ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை, தனியார் கல்லுாரிகளின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது.

நாடு முழுதும், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, ‘நீட்’ நுழைவுத் தேர்வு வாயிலாக நடந்து வருகிறது.
முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு ‘நீட்’ தேர்வை கொண்டு வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பின்வாசல் வழியாக சில தனியார் நிறுவனங்கள் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் செய்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
மருத்துவ கல்லுாரிகளில், என்.ஆர்.ஐ., கோட்டா தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய துாதரகங்களின் உதவியுடன் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.
அதில், மேற்கு வங்கம், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் என்.ஆர்.ஐ., கோட்டாவில் முறைகேடு செய்து மருத்துவ மாணவர்களை சேர்க்க, தனியார் கல்லுாரிகளே முகவர்களை நியமித்தது தெரியவந்து உள்ளது.
இந்த முகவர்கள், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களை போல, உள்நாடு மாணவர்களுக்கு துாதரக ஆவணங்கள், போலியான வீட்டு முகவரிகளை உருவாக்கி கொடுத்துள்ளனர்.
அதன் மூலம் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 18,000 மாணவர்கள் வரை சேர்க்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
சில உண்மையான என்.ஆர்.ஐ., மாணவர்களும் முகவர்கள் கொடுக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு, இந்த மோசடிக்கு துணைபோயுள்ளனர். அதன் மூலம், என்.ஆர்.ஐ., கோட்டாவில் அவர்களது பெயர்கள் பயன்படுத்தப்பட்டு, போலி மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தனியார் கல்லுாரிகளில் நடத்தப்பட்ட சோதனையில், போலியான என்.ஆர்.ஐ., சான்றிதழ்கள், அமெரிக்காவில் பணியாற்றும் நோட்டரி அதிகாரியின் பத்திரங்கள் சிக்கியுள்ளன.
என்.ஆர்.ஐ., கோட்டாவில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு, என்.ஆர்.ஐ., உறவினர் தான் கல்லுாரி கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால், அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், பெரும்பாலான மாணவர்களுக்கு என்.ஆர்.ஐ., குடும்பத்தினர் கட்டணம் செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷா அரசுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.
ஆனால், அமலாக்கத்துறை குறிப்பிட்ட தனியார் கல்லுாரிகள் மீது இரு மாநில அரசுகளும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேற்குவங்கத்தில் ஒரு தனியார் கல்லுாரியில் நடத்திய சோதனையின்போது 6.42 கோடி ரூபாய் வங்கி வைப்பு தொகை கணக்கில் வராததால், அதை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
அதே போல் மேலும் சில கல்லுாரிகளில் நடந்த சோதனையில், 12.33 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் வராத சொத்துகள் இருந்ததால், அவற்றை முடக்கியது.
இந்த தனியார் கல்லுாரிகளில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சான்றிதழ்களை வெளிநாட்டில் உள்ள இந்திய துாதரகங்களின் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளனர்.
அதில் பெரும்பாலான என்.ஆர்.ஐ., கோட்டா சேர்க்கை போலியானவை என்பது தெரியவந்து உள்ளது. தனியார் கல்லுாரிகளில் நடந்த இந்த முறைகேடு நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.