மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் போர் துவங்கியது. காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், காசாவின் முக்கிய மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். பத்திரிகையாளர்கள், மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரங்கல் தெரிவித்தார்.
இது குறித்து, பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காசாவில் உள்ள மருத்துவமனையில் இன்று நடந்த துயர சம்பவத்திற்கு இஸ்ரேல் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது.
பத்திரிகையாளர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களின் பணியையும் இஸ்ரேல் மதிக்கிறது. ராணுவ அதிகாரிகள் முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்கள் போர் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் தான். எங்கள் இலக்குகள் ஹமாஸை தோற்கடித்து எங்கள் பிணைக் கைதிகளை வீட்டிற்கு அழைத்து வர வேண்டும். இவ்வாறு நெதன்யாகு கூறியுள்ளார்.