முன்னதாக ஊர்காவற்துறை பகுதியில் மாலை ஆரம்பமான நிகழ்வுகளை தொடர்ந்து, அராலி சந்தி, மண்கும்பான் பிள்ளையார் கோவிலடி ஆகிய இடங்களில் நிகழ்வுகள் இடம்பெற்று, இரவு மண்டைதீவில் பிரதான நிகழ்வுகள் இடம்பெற்றன.

மண்டைதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை மண்டைதீவு முதலாம் வட்டாரம் பகுதியில் உள்ள கிணறொன்றில் போடப்பட்டதாக கூறப்படும் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மூடப்பட்ட கிணற்றுக்கு முன்பாக பிரதான தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து , கிணற்றை சுற்றி தீபங்கள் ஏற்றப்பட்டு, மூடப்பட்ட கிணற்றின் மேல் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவரின் உருவ படங்கள் அவ்விடத்தில் வைக்கப்பட்டு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
26.08.1990 ஆம் ஆண்டு தீவக பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் பல்வேறு தரப்பினர் கூறிவரும் நிலையில் கடந்த 20 ஆம் திகதி வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் பிரகலாதன் குறித்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.