இலங்கையில் பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு பாதாள உலகக் குழுவினரை இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட ‘கெஹெல்பத்தார பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகிய முக்கிய நபர்கள் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இந்த ஆறு பேரும், இந்தோனேசியாவின் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பிரதான குற்றவாளியான கெஹெல்பத்தார பத்மே, மலேசியாவிலிருந்து தப்பிச் சென்று ஜகார்த்தாவில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் இந்தோனேசிய அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஆறு பேர் மீதும் கொலை, போதைப்பொருள் கடத்தல், கொள்ளை உள்ளிட்ட பல தீவிர குற்றங்கள் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்தோனேசியாவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, சர்வதேச குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழுவினருக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.