நாள்- 01

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 60ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமான தமிழின அழிப்பிற்கு, நீதி கேட்பதன் மூலம் சிங்கள பேரினவாத அரசினை குற்றவாளிக்கூண்டில் ஏற்றி தமிழின அழிப்பிற்கு நீதியை பெறுவதுடன், தமிழர்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு பேரணி 15.09.2025 திங்கட்கிழமை அன்று, “மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” என முழங்கிய தியாக தீபம் லெப்.கேணல். திலீபன் அவர்களின் உண்ணா நோன்பின் ஆரம்ப நாளில் ஜெனிவா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவிலிருந்து ஐ.நா சபை முன்றலில் உள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலினை நோக்கி மாபெரும் பேரணி இடம்பெற உள்ளது.
அதனை வலுப்படுத்தும் வகையில் நீதிக்கும், உரிமைக்குமான ஈருருளப்பயணப் போராட்டம் இன்று (28.08.2025) பிரித்தானியாவின் லண்டன் கரோ – நகர் பகுதியில் இருந்து ஆரம்பமாகியது பிரத்தானிய பிரதமர் அலுவலகம்,பாராளுமன்றம் ஆகியனவற்றில் சந்திப்புகளை முன்னெடுத்து பிரித்தானியாவில் பயணித்து முறையே நெதர்லாந்து, பெல்ஜியம், யேர்மன், பிரான்ஸ் ஊடாக பயணம் மேற்கொண்டு சுவிற்சர்லாந்து நாட்டில் எதிர்வரும் (15.09.2025) திங்கட்கிழமை ஐ.நா முன்பாக நடைபெற இருக்கும் மக்கள் பேரணியில் இணைய இருக்கின்றது.
“போராட்ட வடிவங்கள் மாறலாம் , நாம் கொண்ட இலட்சிய நோக்கம் என்றும் மாறாது” எனும் தேசியத் தலைவரின் கூற்றுக்கு இணங்க எவ்விடர் வரினும் தளராத துணிவோடு, போராடிய மாவீரர்கள் மற்றும் பொது மக்களின் தியாகமே இன்றும் எமது போராட்ட உறுதியினை உயிர்ப்போடு வைத்திருக்கின்றது. எனவே, அனைத்துப் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களையும் பேரணியில் பங்கேற்குமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.
