சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (ஆக.30) ஜெர்மனி புறப்படும் முதல்வர் ஸ்டாலின் அங்கு 3 நாட்கள் தங்குகிறார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

செப்.1’ம் தேதி பிரிட்டன் தலைநகர் லண்டன் செல்லும் அவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களிடையே உரை நிகழ்த்துகிறார். ஆக்ஸ்போர்டு பல்கலை’யில் ஈவெரா படத்தை திறந்து வைக்கிறார்.
மேலும், லண்டனில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்கிறார். 7 நாட்கள் பயணத்திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பது தொடர்பாக பேச உள்ளார்.
அவரின் இந்த சர்வதேச பயணத்தின் போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அவர் தமது எக்ஸ் தள வலை பதிவில் கூறி உள்ளதாவது;
வலுவான மாநிலங்களே வலிமையான ஒன்றியத்தைக் கட்டமைக்கின்றன. மத்திய – மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்திடத் தமிழகம் அமைத்துள்ள உயர்நிலைக் குழுவின் இணையத்தளத்தில் தங்களது கருத்துகளைப் பகிர்ந்திடக் கோரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் – அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் தலைமைக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி உணர்வினை நாம் இணைந்து புதுப்பிப்போம். – இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.