5 பேர் பலி, 40 குடும்பங்கள் மண்ணில் புதைந்தன.
உத்தராகண்டில் வெவ்வேறு மாவட்டங்களில் மேகவெடிப்பு காரணமாக நேற்று கனமழையும், அதைத் தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில், ஐந்து பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்ணில் புதைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

உத்தராகண்டில், கடந்த 5 மற்றும் 22ம் தேதிகளில் உத்தரகாசி மற்றும் சமோலி மாவட்டங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது. இந்த சம்பவங்களில் ஏழு பேர் பலியாகினர்.
ராணுவ வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இந்த சூழலில், இங்குள்ள சமோலி, பாகேஷ்வர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது.
பாகேஷ்வர் மாவட்டத்தின் கப்கோட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு துவங்கி, விடியவிடிய கொட்டிய மழையால், ஏராளமான வீடுகள், வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இதில் இருவர் உயிரிழந்தனர்; மூன்று பேர் மாயமாகினர். சமோலி மாவட்டத்தின் மொபாட்டா கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் தம்பதி உயிரிழந்தனர். மாட்டுத் தொழுவத்தை ஒட்டி ஏற்பட்ட நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் சிக்கின.
தனித்தீவு கனமழையால், தல்ஜாமனி கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 40 குடும்பங்கள் மண்ணில் புதைந்தன. அவர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. ஜகோலியில், வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார்.
செனகாட் பகுதியில் கடைகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. செனகாட் துங்கர் கிராமத்தில் ஏராளமானோர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ருத்ரபிரயாக் மாவட்டத்தின் பசுகேதார் பகுதியில் கொட்டிய மழையால், ஆறு கிராமங்கள் தனித் தீவுகளாக மாறியுள்ளன. இங்கு, நிலச்சரிவால் 78 இடங்களில் சாலைகள் சேதமடைந்து உள்ளதால் சியுர், பதேத், பகதார் உட்பட பல்வேறு கிராமங்களுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனால், மீட்பு பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக லாவோரா கிராமத்தில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
தெஹ்ரி மாவட்டத்தின் புதா கேதார் பகுதியிலும் இடைவிடாது கொட்டிய மழையால் பெரும் சேதம் ஏற்பட்டது. விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியதால், விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தொடர் மழையால், பால்கங்கா, தர்மகங்கா, உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
வெள்ளப்பெருக்கு அலக்நந்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கரையோரம் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு, அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
சமோலி – நந்த்பிரயாக், காமேடா, பானேர்பானி, பகல்னாலா, ஜிலாசூ, குலாப்கோட்டி மற்றும் சத்வாவிபால் பகுதிகளில் குவிந்துள்ள இடிபாடுகளால், பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ருத்ரபிரயாக் மாவட்டத்திலும், சிரோப்காட்டில் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
பன்ஸ்வாரா முதல் சோப்தா வரையிலான சாலையில் நான்கு இடங்கள் சேதமடைந்துள்ளதால், கேதார்நாத் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சாலைகளை சரிசெய்யும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளதால், நிலைமையை அறிந்து பயணம் செய்யுமாறு பயணியரை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில், தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், துணை ராணுவப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
எச்சரிக்கை பாதிப்பு ஏற்பட்ட மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேசினார். பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து கேட்டறிந்தார். நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
உத்தராகண்டின் பாகேஷ்வர், சமோலி, டேராடூன் மற்றும் ருத்ரபிரயாக் மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை முதல் மிக கனமழைக் கான ரெட் அெலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது.
சம்பவத், ஹரித்வார், பித்தோராகர், உதம் சிங் நகர் மற்றும் உத்தரகாசி மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அெலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்வதால், மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும் படி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.