பீஹாரில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொண்டது.

அப்போது, வேறு இடத்துக்கு குடி பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர்கள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் 65 லட்சம் பேர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந் நிலையில், இந்தியா டுடே-சி வோட்டர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை 58 சதவீதம் பேர் ஆதரித்துள்ள விவரம் தெரிய வந்திருக்கிறது.
நாடு முழுவதும் மக்களின் மனநிலை தற்போது எப்படி உள்ளது? தேர்தல் நடத்தப்பட்டால் எந்த அரசியல் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதை மையமாக வைத்து இந்தியா டுடே-சி வோட்டர் நிறுவனம் சர்வே ஒன்றை நடத்தி உள்ளது. அதன் முடிவுகளையும் ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகிறது.
பீஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பது பற்றியும் இந்த சர்வேயில் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
அவர்களில் 58 சதவீதம் பேர் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, இதன் மூலம் குடிமக்களின் வாக்காளர் உரிமை பாதுகாக்கப்பட்டு உள்ளதாக கூறி உள்ளனர்.
17 சதவீதம் பேர் அரசியல் கட்சிகளுக்கு உதவுவதற்காக வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது என்றும், 12 சதவீதம் பேர் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் பதில் அளித்துள்ளனர். ஒட்டு மொத்த சர்வே மூலமாக மெஜாரிட்டியான வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சரியே என்று தங்கள் ஆதரவை வழங்கி இருக்கின்றனர்.
இந்தியா டுடே-சி வோட்டர் நிறுவனத்தின் சர்வே ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடத்தப்பட்டது. பீஹாரில் உள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளில் மொத்தமாக 54,788 தனிநபர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதனுடன், சி வோட்டர் நிறுவனத்தின் கைவசம் உள்ள வழக்கமான தரவுகள் அடிப்படையில் 1,52,038 பேரின் நேர்காணல்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
ஒட்டு மொத்தமாக, 2,06,826 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
முன்னதாக, தவறுகளை சரிசெய்தல், வாக்காளர்கள் இடம்பெயர்வு மற்றும் மக்கள்தொகை மாற்றங்களுக்கு ஏற்ப வாக்காளர்கள் பதிவுகளை புதுப்பித்தல் ஆகியவையே பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளின் நோக்கம் என்று தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்தி இருந்தது. அதை ஒட்டியே சர்வே முடிவுகளும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.