பிரதான மூன்று அரச வங்கிகளிலும் வருடாந்த போனஸ் கொடுப்பனவு உள்ளிட்டவற்றுக்கு நியாயமற்ற முறையில் வரையறைகள் விடுக்கப்பட்டுள்ளமை மற்றும் அவற்றுக்கு அதிக வரி அறவிடப்படுகின்றமை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து அரச வங்கி சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன.

பல தசாப்தங்களாக தாம் பெற்று வந்த உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதாகவும், சலுகைகள் நீக்கப்படுவதாகவும் குறித்த தொழிற்சங்கங்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன. போனஸ் கொடுப்பனவு நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு வருகிறது.
வங்கி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் போனஸ் கொடுப்பனவின் காரணமாகவா நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது? எந்தவொரு நபருக்கும் பங்குதாரராகக் கூடியவாறு இலங்கை வங்கி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை மின்சாரசபைக்கு செய்தததையே அரச வங்கிகளுக்கும் செய்கின்றனர். அரச வங்கி உத்தியோகத்தர்களுடன் பேச்சுவார்த்தைளுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்துவதற்கு கூட இயலாமல் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி தோல்வியடைந்துள்ளார்.
இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியாமல் இருக்கலாம் அல்லது அவர் இதனை கவனத்தில் கொள்ளாமல் இருக்கலாம் என்றும் அந்த தொழிற்சங்கங்கள் விசனம் வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை வங்கி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க, தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைவதற்குள் அரச வங்கி உத்தியோகத்தர்களையும் வீதிக்கு கொண்டு வருவதில் இந்த அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது.
வரலாற்றில் அரச வங்கி உத்தியோகத்தர்கள் வீதிக்கிறங்கி மீண்டும் உட்சென்றால் ஒன்றில் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும், அல்லது அந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கும்.
இன்று நாம் வீதிக்கிறங்கியிருக்கின்றோம். எமது பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சகல தொழிற்சங்க உறுப்பினர்களையும் அழைத்து மக்கள் வங்கி தலைமையக வளாகத்தை முடக்கவும் எம்மால் முடியும்.
எம்மை அடக்க முற்பட்டால் சகல அரச வங்கிகளையும் மூடி வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தயங்க மாட்டோம் என அரசாங்கத்தை எச்சரி;க்கின்றோம் என்றார்.