தங்க ஆபரணங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டவிரோத செயல்பாட்டால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

அதேபோல், நாடு முழுதும் பல்வேறு விமான நிலையங்களில் சமீப காலமாக தங்க கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த கடத்தலுக்கு, சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சிலர், துணை போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சமீபத்தில், கன்னட திரையுலகை சேர்ந்த நடிகை ரன்யா ராவ், துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானம் வாயிலாக, தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர், 12.56 கோடி ரூபாய் மதிப்புள்ள, 14.2 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த கடத்தலுக்கு, மத்திய அரசு ஊழியர்கள் சிலர் ஆதாயம் பெற்று உதவியதாக சி.பி.ஐ., குற்றம் சாட்டியது.இது தொடர்பாக ஏற்கெனவே சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சென்னையில் தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர். சென்னை மீனம்பாக்கம், கோயம்பேடு, பூக்கடை உட்பட ஆறு இடங்களில் சோதனை நடந்தது. மீனம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பகுதிகளில், சுங்கத்துறை அதிகாரி வீட்டிலும், பூக்கடை பகுதியில், தனியார் நகைக்கடை உரிமையாளர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில், கோயம்பேடு சுங்கத்துறை அதிகாரி வீடு பூட்டப்பட்டிருந்ததால், இரண்டு மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள், சோதனை செய்யாமல் திரும்பி சென்றனர். இது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறுகையில், ‘சோதனை ஆரம்ப நிலையில் உள்ளதால், விபரங்களை தற்போது வெளியிட இயலாது. சோதனை நிறைவடைந்த பின் முறைப்படி தகவல் தெரிவிக்கப்படும்’ என்றனர்.