சீனாவின் தியான்ஜின் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். கடந்த 2018 ம் ஆண்டு சீனாவின் வூஹான் நகருக்கு பிரதமர் சென்றிருந்தார். அதன் பிறகு 7 ஆண்டுகளில் தற்போது சென்றுள்ளார்

டிரம்ப்பின் அழுத்தத்துக்கு இரு நாடுகளும் ஆளாகி உள்ள நிலையில், பிரதமர் மோடியின் தற்போதைய பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இதில், பொருளாதாரம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இந்தியா மீதான வரி விதிப்புக்கு சீனாவும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், சீனாவின் துறைமுக நகரமான தியான்ஜின் நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதில் எல்லை பிரச்னை, இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியை வரவேற்று ஷி ஜின்பிங் பேசியதாவது: சீனாவின் முக்கிய நட்பு நாடாக இந்தியா உள்ளது. பிராந்திய மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்காக இரு தரப்பு உறவுகளை இரண்டு நாடுகளும் கவனத்துடன் கையாள வேண்டும்.நம்பிக்கையை வளர்க்க இரு நாடுகளுக்கு இடையே இன்னும் தொடர்பை அதிகரிக்க வேண்டும். பொருளாாதரம் மற்றும் சர்வதேச விவகாரங்களில் இன்னும் வலிமையான ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும்.
நாம் போட்டியாளர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்கிறோம். இதன் மூலம் மிரட்டலுக்கு பதில் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை வழங்க முடியும். நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மாற்றத்தை உலகம் எதிர்கொண்டு வருகிறது.
சர்வதேச சூழ்நிலை தற்போது குழப்பம் நிறைந்ததாக காணப்படுகிறது. இந்தியாவும் சீனாவும் மிகுந்த பழங்கால நாகரிக நாடுகள். உலகின் மிகப்பெரிய இரண்டு நாடுகளாகவும் இருக்கிறோம். சீனா என்னும் டிராகனும், இந்தியா என்னும் யானையும் நண்பர்களாகவும், சிறந்த நட்பு நாடாகவும் இருப்பது மிகவும் அவசியம். இவ்வாறு ஷி ஜின்பிங் பேசினார்.