
காணாமல் ஆக்கப்பட்டவர்
ஒரு மனிதர் மட்டுமல்ல,
ஒரு குடும்பத்தின் சுவாசம்,
ஒரு சமூகத்தின் ஆன்மா.
தாயின் கண்ணீர் துளிகள்,
ஒவ்வொரு நாளும் மன உளைச்சலாகி,
துயரத்தை மனநோயாக மாற்றுகின்றன.
“என் மகன், மகள்எங்கே?” என்ற கேள்வி
உளவியல் வலியாக மாறுகிறது.
குழந்தையின் நெஞ்சில் பதியுகிறது
அப்பா திரும்புவாரா என்ற வெற்றிடம்;
அந்த வெற்றிடம் நாளொரு நாள்
பயம், கவலை, மனச்சோர்வாக மலர்கிறது.
சமூகமெங்கும் பரவுகிறது
சந்தேகம், நம்பிக்கையின்மை, அச்சம்.
நீதி கிடைக்கவில்லை என்ற உணர்வு
மன அமைதியை நசுக்கும் சுமையாக நிற்கிறது.
ஆனால்
உளவியலின் தீபம் சொல்லுகிறது:
நினைவு அழியாது,
அநீதி மறையாது,
உண்மையைத் தேடும் உறுதி
மனத்தைக் காப்பாற்றும் சக்தி.
காணாமல் போனோர் வாழவில்லை என்பதல்ல,
அவர்கள் நினைவுகள் உயிரோடு—
அந்த நினைவுகள் தான்
மக்களைப் போராட வைக்கும் உளவியல் சக்தி.
கண்ணீரை கோஷமாக மாற்றும் வலிமை,
துயரத்தை நீதி தேடும் சக்தியாக்கும் நம்பிக்கை—
இவை தான் உளவியலின் ஆயுதங்கள்.
ஈழ மண்ணின் இதயம்
நீதி வரும்வரை அமைதியடையாது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் மௌனம்
எப்போதும் நம் மனச்சாட்சியை எழுப்பும்…
நடராசா கோபிராம்
உளவியல் சிறப்புக் கலை மாணவன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்