ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது மீளாய்வுக் கூட்டத்தொடர் எதிர்வரும் 8’ம் திகதி ஆரம்பமாகிறது. இக்கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் பங்கேற்கவுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவா செல்ல முன்னர் உள்நாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார். வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன.

புதன்கிழமை பன்னாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான முன்னெடுப்புக்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் தெளிவுபடுத்தவுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் ரூர்க்கினால் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை குறித்த புதிய அறிக்கை குறித்தும் இதன் போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இம்முறை கூட்டத்தொடரில் கடந்தகால மனித உரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அரசாங்கம் மேலும் கால அவகாசத்தை கோரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்ஸ்தானிகரின் அறிக்கையை அரசாங்கம் நேரடியாக பேச்சுவார்த்தை மூலம் எதிர்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளது. இ;ந்நிலையில் இந்த அறிக்கையானது இலங்கை இராணுவத்தின் மீது போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அமையும் என்று ஒரு சாரார் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் அமைச்சரான ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவின் ஏற்பாட்டில் இதற்கெதிராக பொது மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. உயர்ஸ்தானிகர் வோல்கர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலை, சட்ட நடைமுறைகள் மற்றும் அரசின் ஒத்துழைப்புகள் குறித்த மதிப்பீடு இடம்பெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு கையெழுத்து சேரிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.