மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப உள்ளதால், மாலையில் உபரி நீர் திறந்து விடப்படும். இதைத் தொடர்ந்து, கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் – கர்நாடகா எல்லையிலுள்ள நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கிறது. நேற்று, 9,828 கனஅடி-யாக இருந்த நீர் வரத்து, இன்று காலை 31,954 கன அடியாகவும், மாலை 36,985 கன அடியாகவும் அதிகரித்தது.
டெல்டா பாசனம் மற்றும் கால்வாயில் வினாடிக்கு 23,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மாலை 4 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 119.5 அடியாகவும், நீர் இருப்பு 92.5 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணை நிரம்ப இன்னும் அரை டிஎம்சி நீர் மட்டுமே தேவைப்படுகிறது.
இதனால், அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் வெளியேற்றப்படலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து கரையார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.