நிலத்தை தோண்டும் போது எம்மவர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெறும். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். மறைப்பதற்கு ஏதும் எம்மிடமில்லை.

இனிவரும் காலங்களில் இலங்கையில் இவ்வாறான நிலை ஏற்படக்கூடாது.கொடூரமான அனுபவங்கள் மீண்டும் தோற்றம் பெறாத வகையில் அவை நினைவுகூரப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அங்கு உரையாற்றுகையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,
எமது மீனவர்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.இலங்கையின் பிரதான கேந்திரமையமாக கச்சத்தீவு காணப்படுகிறது. கச்சத்தீவு இன்று பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.நாட்டின் ஆட்புல எல்லைகளை பாதுகாத்து அவற்றை எதிர்கால தலைமுறையினருக்கு வழங்குவது எமது பொறுப்பாகும்.அந்த பொறுப்பை நிறைவேற்றும் கடப்பாடு எமக்கு உண்டு.
எமது தீவு, நிலம்,ஆகாயம் அனைத்தும் எமது மக்களுக்குரியது. கச்சத்தீவு விவகாரத்தில் எவ்வித அழுத்தங்களுக்கும் நாங்கள் அடிபணிய போவதில்லை.