
கப்டன் மோகன் (மேத்திரி)
காசிநாதன் நகுலேஸ்வரன்
நகுலேஸ்வரன் வீதி, நெடியகாடு,
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
30.09.1965 – 02.09.1990
02.09.1990 அன்று சிறிலங்கா கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வேளை படகுடன் சேர்த்து தன்னையும் அழித்து வீரச்சாவு.
கடலைப்போல எங்களது மனங்களும் கொந்தளித்துக் கொண்டிருந்தன.
தூரத்தில் புள்ளியாகத் தெரிந்த ‘டோரா’ வரவரப் பெருத்துக் கொண்டிருந்தது; அலைகள் கிழிய நேவிப்படகு நெருங்கிக் கொண்டிருந்தது.
எங்களின் அந்தப் படகுகள் இரண்டும் தமிழகத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தன.
அவற்றில் புலிவீரர்களுடன், முக்கிய தளபாடங்களும் கலந்து இருந்தன.
நேவிப்படகின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடித்தப்பிவிடலாம் என்பது, அன்றைய நாளில் அரிதான ஒரு நிகழ்ச்சி தான்.
உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும். இல்லையேல் இரண்டு படகுகளுமே அழிக்கப்படுவது உறுதி.
பொருட்களை இழந்தாலும் பரவாயில்லை.
போராளிகளையாவது காக்க வேண்டும்.
மோகன் மேத்திரியின் மூளை துரிதமாக வேலை செய்தது.
எங்கள் எல்லோரையும் அடுத்த படகிற்கு மாற்றிவிட்டு, பொருட்களைத் தான் இருந்த படகில் ஏற்றிக்கொண் டான்.
“உங்கட வண்டியை வேகமாக கரைக்கு விடுங்க. நான் இன்னொரு பக்கமாக கரைக்கு ஓடுறன்.
அவன் என்னைக் கலைப்பான்.
தப்பினா…
வந்திடுவன். அவன் நெருங்கிட்டானெண்டா வண்டியையும் சமான்களையும்
எரிச்சிடுறன்…”
தான் இறந்தாலும்கூட படகோ, பொருட்களோ எதிரியிடம் அகப்படக்கூடாது என்பதில் அவன் உறுதியாய் இருந்தான்.
கனத்த இதயங்களோடு நாங்கள் பிரிய இரு வண்டிகளும் இரு திசைகளில் விரைந்தன.
மோகன் மேத்திரியின் படகை நேவிப்படகு துரத்திக்கொள்ள, எங்களது படகுகரையைத் தொட்டுவிட்டது.
அவன் கரையை நோக்கி ஓட, அதைவிட வேகமாக ‘டோரா’ அவனை நெருங்கியதை நாம் பார்த்துக்கொண்டிருந்தோம்.
ஒரு கட்டத்தில் – இனி அவன் தப்ப முடியாது என்பதை நாங்கள் துயரத் தோடு உணர்ந்துகொண்ட போது, நடுக்கடலில் ஓடிக்கொண்டிருந்த படகில் தீப்பிடித்தது.
எரிந்துகொண்டிருந்த படகிலிருந்து கையை உயர்த்தி அவன் அசைத்திருப்பான் போலும்….
எங்களது மனங்கள் துடிக்க, எங்களது கண்ணெதிரிலேயே கடலில் எரிந்து கொண்டிருந்தான்!
– களத்தில்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”