மின்னணு சாதனங்கள் போன்றவற்றை ‘பொதியிடல் செய்ய, பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, தென்னை நாரில் இருந்து பொருட்களை தயாரிப்பதற்கான சோதனையில் ஈடுபட, தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மேம்பாட்டு மையத்தை, 10 கோடி ரூபாயில் தமிழக அரசு அமைக்க உள்ளது.

தேங்காய் மட்டையிலிருந்து தென்னை நார், தென்னை நார் துகள் பிரித்து எடுக்கப்படுகின்றன. இவற்றில் இருந்து தரைவிரிப்பு, மிதியடி உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
கிலோ 15 ரூபாய் தமிழகத்தில் ஆண்டுக்கு, 3 லட்சம் டன் தென்னை நார் கிடைக்கிறது. இதன் விலை கிலோ, சராசரியாக 15 ரூபாயாக உள்ளது. கிடைக்கும் மொத்த தென்னை நாரிலிருந்து, 20 சதவீதம் தான், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
மீதமுள்ள, 80 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவற்றில் சீனாவின் பங்கு மட்டும் 90 சதவீதம். அந்நாடு, அதில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து, அதிக விலைக்கு விற்கிறது.
சுற்றுச்சூழலை பாதிக்காத தென்னை நாரில் தயாரிக்கப்படும் பசுமை குடில், புவி விரிப்பு, தரை விரிப்பு உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது.
எனவே, தமிழகத்தில் தென்னை நார் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தென்னை நாரில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான சோதனையில் ஈடுபட, உற்பத்தி வடிவமைப்புக்கான மேம்பாட்டு மையத்தை, 10 கோடி ரூபாயில் தமிழக கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் அமைக்க உள்ளது.
நவீன சாதனங்கள் இது குறித்து, தென்னை நார் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கூறியதாவது:
தென்னை நாரில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கவும், அதை வடிவமைக்கவும், நவீன தொழில்நுட்ப சாதனங்கள், மென்பொருள் போன்றவை அவசியம்.
இதற்கு அதிக முதலீடு தேவை என்பதால், குறைந்த முதலீட்டில் ஈடுபடும் சிறு, குறு நிறுவனங்களால், சோதனைக்கு அதிகம் செலவிட முடியாது. இதனால், புதிய பொருட்கள் தயாரிப்பில் கவனம் செலுத்துவதில்லை.
தொலைக்காட்சி, மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ‘பிளாஸ்டிக் கவர்’களில், ‘பேக்கிங்’ செய்யப்படுகின்றன.
த ற்போது, தென்னை நாரை இழை போல் உருவாக்கி, அதில் சில பொருட்களை சேர்த்து, பேக்கிங் செய்யும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் தான், தென்னை நார் தயாரிப்பில் அதிக நி றுவனங்கள் உள்ளன.
எனவே, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும் தமிழக கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மேம்பாட்டு மையத்தை, கோவையில் அமைக்க வேண்டும். -இவ்வாறு அவர்கள் கூறினர்.