கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டம், மேலிகட்டி, ஜங்கினாகட்டி கிராமங்களைச் சேர்ந்த ஆடு மேய்ப்பவர்கள், கிருஷ்ணா நதியின் மத்திய பகுதியில், 218 ஆடுகளை நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர்.

அப்போது, நாராயணபுரா பசவசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால், ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்தது. ஆடு மேய்ப்பவர்கள் மட்டும் கரைக்கு தப்பி வந்தனர். ‘ஆடுகளை மீட்க வேண்டும்’ என்று, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நேற்று நிறுத்தப்பட்டது. பின், கரைகளில் உள்ள மீனவர்களின் படகுகள் மூலம் நதியின் மத்திய பகுதிக்கு சென்று, 31 ஆடுகளை மீட்டனர்; 187 ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தன.
‘ ஆடுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்’ என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.