ரஷ்யாவின் முக்கிய வர்த்தக ஆதாரமாக கச்சா எண்ணெய் உள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக, ரஷ்யாவிடம் அதிக கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.

கடந்த 2022 – 23 முதல் தற்போது வரை, கிட்டத்தட்ட 39 மாதங்களில், ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கியதன் வாயிலாக, இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சேமிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் சேமிப்பு கருதி, ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும் நிலையில், உக்ரைன் போரைத் தொடரும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை கண்டித்து, இந்தியப் பொருட்கள் இறக்குமதி மீது கூடுதலாக, 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது.
எனினும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் அதிக அளவில் வாங்கும் சீனா மீது, அமெரிக்கா எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனினும், அமெரிக்க வரி விதிப்புக்குப் பின், விலை அடிப்படையில் தேவைப்பட்டால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது தொடரும் என, எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.