இவரது துவக்க இடத்தை சுப்மன் கில் தட்டிச் செல்லலாம். பின் வரிசையில் ஜிதேஷ் சர்மா சவால் கொடுக்கலாம்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை ‘டி–20’ தொடர் (செப். 9–28) நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. செப். 14ல் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா–பாகிஸ்தான் மோத உள்ளன.
இத்தொடருக்கான இந்திய அணி துணை கேப்டனாக புதிதாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். இதனால் ‘டாப்-ஆர்டரில்’ குழப்பம் ஏற்பட்டது. முன்பு துவக்கத்தில் அபிஷேக் சர்மா-சாம்சன் அசத்தினர். தற்போது சுப்மன் வருகையால், சாம்சன் இடம் பெறுவது கடினம். அபிஷேக், சுப்மன், திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா என ‘டாப்-5’ பேட்டிங் வரிசை அமையும். 6வது இடத்திற்கு கீப்பர்-பேட்டர்களான சாம்சன், ஜிதேஷ் சர்மா இடையே போட்டி காணப்படுகிறது.
சாம்சனை பொறுத்தவரை துவக்க வீரராக மிரட்டுவார். தற்போதைய கேரள ‘டி-20’ கிரிக்கெட் லீக்கில் ‘சூறாவளியாக’ ரன் சேர்க்கிறார். கொச்சி புளூ டைகர்ஸ் அணிக்காக விளையாடும் இவர், ‘ஓபனராக’ 121(51 பந்து), 89 (46), 62 (37), 83 (41) ரன் விளாசினார். 5 இன்னிங்சில் 30 சிக்சருடன் 368 ரன் (ஸ்டிரைக் ரேட் 186.80) குவித்துள்ளார். 42 சர்வதேச ‘டி-20’ போட்டிகளில் 861 ரன் (ஸ்டிரைக் ரேட், 152.38, சராசரி 25.32) எடுத்துள்ளார். ஒரு ஆண்டில் ‘டி-20’ அரங்கில் 3 சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இதனால், ஆசிய கோப்பையில் வாய்ப்பை எதிர்பார்க்கிறார். சுப்மன் இதுவரை 21 சர்வதேச ‘டி-20’ போட்டியில் 578 ரன் (ஸ்டிரைக் ரேட் 139.27, சராசரி 30.42) தான் எடுத்துள்ளார்.
கடைசி கட்டத்தில் ‘பினிஷராக’ அசத்துவார் ஜிதேஷ் சர்மா. இந்த ஆண்டு பிரிமியர் தொடரில் பெங்களூரு அணிக்காக 261 ரன் (ஸ்டிரைக் ரேட் 176.35) எடுத்து, கோப்பை வெல்ல கைகொடுத்தார். 9 சர்வதேச ‘டி-20’ போட்டிகளில் 100 ரன் (ஸ்டிரைக் ரேட் 147.05, சராசரி 14.28) எடுத்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,”டி-20′ அரங்கில் ‘டாப்-3’ பேட்டிங் வரிசையில் சாம்சன் 6,000 ரன் (ஸ்டிரைக் ரேட் 140, சராசரி 33) குவித்துள்ளார். 4-7வது இடத்தில் இவரது சராசரி 20 ரன் தான். ஸ்டிரைக் ரேட் 126 ஆக குறைகிறது. இவரை ‘டாப்-ஆர்டரில்’ இருந்து மாற்றினால், சோபிக்க மாட்டார். ஆசிய கோப்பை தொடரில் சுப்மன் வருகையால், இந்திய விளையாடும் ‘லெவனில்’ சாம்சன் இடம் பெறுவது சந்தேகம். இவருக்காக திலக் வர்மா, பாண்ட்யாவை நீக்க முடியாது. ‘பினிஷர்’ என்ற அடிப்படையில் ஜிதேஷ் சர்மா வாய்ப்பு பெறுவார்,”என்றார்.