யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை (3) யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கச்சத்தீவு சுற்றுலாத்தலம் ஆக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த வேளை கச்சத்தீவிற்கும் சென்றுள்ளார் என்பதை நாங்களும் அறிந்திருந்தோம்.
மேலும் கச்சத்தீவை சுற்றுலாத்தலமாக மாற்றமுடியும் என்றொரு கருத்தை கூறியதாக அறிகின்றோம். ஆனால், உண்மையாகவே கச்சத்தீவு புனிதமான தீவு. அங்கு புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. அங்கு ஒவ்வொரு வருடமும் இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் ஒன்றுகூடி புனித அந்தோனியாரின் திருவிழாவை தவக்கால யாத்திரையாக வழிபட்டு வருகிறார்கள்.
ஆகவே அது சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் எந்தவிதத்திலும் விரும்பவில்லை. காரணம், புனித தலத்தின் புனிதத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்.
எனவே, ஜனாதிபதி இந்த விடயமாக யாழ். மறைமாவட்டத்தோடு கலந்துரையாடுவார் என்பது எமது நம்பிக்கை. ஏனென்றால், கச்சத்தீவு யாழ். மறைமாவட்டத்தின் கீழ் வருகின்ற பணித்தலமாக இருக்கின்றது. அங்கு நடைபெறும் திருநாட்கள் எல்லாவற்றையும் நாங்கள் தான் ஏற்பாடு செய்கின்றோம். ஆகவே இவை பற்றிய இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக ஜனாதிபதி யாழ். மறைமாவட்டத்தின் கருத்துகளை பெற்றுக்கொள்வார் என்பது எமது நம்பிக்கை.
ஜனாதிபதி கச்சத்தீவுக்கு சென்றதன் முக்கிய காரணம் என்னவாக இருக்கலாம் என்று சிந்தித்தபோது அண்மைக்காலமாக, இந்தியா தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் “கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது, அதனை மீளப் பெறவேண்டும்” என பிரச்சாரம் செய்துவருகின்றார்கள்.
எனவேதான் ஜனாதிபதியின் முக்கியமான நோக்கம் “இது இலங்கைக்கு சொந்தமான தீவு, இதை யாருமே உரிமை கோர முடியாது” என்பதை வலியுறுத்துவதற்காகவே அங்கு சென்றுள்ளார். அதனை சுற்றுலாத்தலமாக மாற்றுவது என்பது இரண்டாம் தரமான எண்ணமாக இருந்தாலும், கச்சத்தீவு இலங்கைக்குரியது, அதனை எந்த நாடும் உரிமை கோர முடியாது என்பதை தன்னுடைய கால்தளத்தை பதித்து அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார் என்பதுதான் எங்களுடைய கருத்து என்றார்.