‘குடியுரிமை திருத்தச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து 2024, டிச., 31 வரை இந்தியா வந்த ஹிந்துக்கள், பவுத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணமும் இன்றி, இங்கேயே தொடர்ந்து வசிக்கலாம்’ என, இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

அண்டை நாடுகளாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் ஹிந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள், அங்கு சிறுபான்மையினராக கருதப்படுகின்றனர். அங்கு அவ்வப்போது தாக்கு தலுக்கு உள்ளாகும் இவர்கள், அகதிகளாக நம் நாட்டில் தஞ்சம் அடைகின்றனர்.
அவ்வாறு வந்து, இங்கு குடியேறும் முஸ்லிம் அல்லாத பிற மதத்தினருக்காக சி.ஏ-.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா, 2019ல் பார்லிமென்டில் பா.ஜ., தலைமையிலான மத்திய அரசால் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின் கடந்தாண்டு மார்ச் மாதம் அமலுக்கு வந்தது.
இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31க்குள், நம் நாட்டிற்கு வந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
இந்த சூழலில், சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025ன்படி, சி.ஏ.ஏ.,வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து 2024, டிச., 31ம் தேதி வரை இந்தியா வந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்துவர்கள், பாஸ்போர்ட் உள்ளிட்ட எவ்வித ஆவணங்களும் இன்றி, நம் நாட்டில் தொடர்ந்து தங்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.