அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் என். வேதநாயகன் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணம்

உலகளவில் பரப்புங்கள்

இந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற பெறுபேறுகள் தொடர்பிலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாகவும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார்.  

வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (03.09.2025) நடைபெற்றது. 

கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், விவசாய அமைச்சு ஒன்று இருந்து அதன் ஊடாக இதுவரையான காலப் பகுதிகளில் பல மில்லியன் ரூபாக்களை செலவு செய்திருந்தாலும் அதன் ஊடாக விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் எவ்வளவு தூரம் உயர்வடைந்துள்ளன என்பது தொடர்பில் ஆராய வேண்டும். குரலற்ற விவசாயிகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் அவர்களின் தேவைகளை தேடிச்சென்று இனங்கண்டு பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் பணிப்புரை விடுத்தார். 

இதன் பின்னர், விவசாய அமைச்சு, விவசாயத் திணைக்களம், கால்நடை அபிவிருத்தித் திணைக்களம், நீச்பாசனத் திணைக்களம் என ஒவ்வொரு திணைக்களத்தினதும் முன்னேற்றங்கள் தனித்தனியாகவும் விரிவாகவும் ஆராயப்பட்டன. ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றம், இடர்பாடுகள் தொடர்பில் ஆளுநரால் தனித்தனியாக கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீர்பாசனத் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களால் சிறுபோக செய்கையில் மிகப் பெரியளவு உற்பத்தி கிடைக்கப்பெற்றுள்ளபோதிலும், நீர்பாசனத் திணைக்களத்தின் செயற்பாடுகளால்தான் அந்த மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை கவனத்தில் கொள்வதில்லை என்பது தொடர்பிலும் ஆளுநர் கவனம் செலுத்தினார். குளங்கள், வாய்க்கால்களின் அபிவிருத்திகளால் புதிதாக பல ஏக்கர் கணக்கான நிலங்கள் பயிரிடும் நிலங்களாகப்பட்டுள்ளமை தொடர்பாகவும், விவசாயிகளின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பிலும் அறிக்கையிடப்பட வேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். 

அத்துடன் அடுத்த ஆண்டு கால்நடைகள் தொடர்பான துல்லிய தகவல் திரட்டு மற்றும் ஏனைய துறைகளின் துல்லிய தகவல் திரட்டுக்கு நிதி ஒதுக்குவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் ஆளுநர் ஏற்றுக்கொண்டார். 

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், விவசாயத் திணைக்களப் பணிப்பாளர், நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், கால்நடை அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், மாவட்ட பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

உலகளவில் பரப்புங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்