இலங்கை மின்சாரசபை ஏனைய அரச நிறுவனங்களை விட அதிக இலாபமீட்டும் நிறுவனமாகும். ஆனால் அரசாங்கம் அதன் பணியாளர்கள் பாதிக்கப்படும் வகையில் தீர்மானங்களை எடுத்துள்ளது. இவ்வாறு தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்காது மின்சாரசபை உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி அதற்கமைய தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (05.09.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மின்சாரசபையை மறுசீரமைப்பதை யாரும் எதிர்க்கவில்லை. எவ்வாறிருப்பினும் அதற்கான முறையான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. மாறாக 23 000 மின்சாரத்துறை ஊழியர்களும் பாதிக்கப்படும் வகையிலான தீர்மானங்களையே அரசாங்கம் எடுத்துள்ளது. லெகோ நிறுவனம் நாட்டின் ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த இலாபமீட்டும் அரச நிறுவனமாகும்.
ஊழியர்களுடன் வெளிப்படையாக கலந்துரையாடி அரசாங்கம் இது குறித்து தீர்மானத்திருக்க வேண்டும். அன்று மின்சாரசபையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பினை வெளியிட்ட ஜே.வி.பி. மின்சாரசபை தொழிற்சங்கங்கள் இன்று அனைத்து அங்கத்தவர்களையும் கைவிட்டு தன்னிச்சையாக தீர்மானங்களை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் அரசாங்கம் தனது தீர்மானமே சரியானது என உறுதியாகக் கூறுகிறது.
இடம்பெறும் மாற்றங்கள் நியாயமானவையாக இருக்க வேண்டும். மேலும் அவை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும். மாற்றங்கள் துரிதமாக இடம்பெற வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அவை நாட்டுக்கு உகந்தவையாக இருக்க வேண்டும். இதனை வலியுறுத்துவதற்காகவே மின்சாரசபை ஊழியர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் அவர்களின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்றார்.