அமெரிக்காவில் உள்ள ‘ஹூண்டாய் பேட்டரி’ ஆலையில், அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட ஆசிய நாடான தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் உட்பட, 475 வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர், தொழிலாளர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஜார்ஜியா மாகாணத்தில், தென்கொரியாவைச் சேர்ந்த, ‘ஹூண்டாய் மோட்டார்ஸ்’ நிறுவனம் கார்களுக்கான பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையை நடத்தி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த, ‘எல்.ஜி., எனர்ஜி சொல்யூஷன்’ நிறுவனத்துடன் இணைந்து இது நடத்தப்படுகிறது.
இத்தொழிற்சாலையில் சமீபத்தில் அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகக் கூறி, 475 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் 300க்கும் மேற்பட்டோர் தென்கொரியர்கள் என கூறப்படுகிறது-.
இது குறித்து வருத்தத்தையும், கவலையையும் தெரிவித்துள்ளார் தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் சோ ஹியூன். கைது நடவடிக்கையில் சிக்கியவர்களை மீட்க அரசு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும், தேவைப்பட்டால் அக்குழு அமெரிக்கா செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், “நுாற்றுக்கணக்கான தென்கொரிய மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும். மேலும், இதற்கு கடுமையான பதில் நடவடிக்கை எடுக்கப்படும்”, என தெரிவித்துள்ளார். வர்த்தக ஒப்பந்த விபரங்கள் மற்றும் வரிகள் குறித்து அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையே ஏற்கனவே பிரச்னை இருக்கும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பந்த ஊழியர்கள் – இந்த கைது நடவடிக்கை குறித்து, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளதாவது: கைது செய்யப்பட்டவர்களில் யாரும் எங்களால் நேரடியாக பணியமர்த்தப்படவில்லை. அனைத்து சப்ளையர்களும் அவர்களது துணை ஒப்பந்ததாரர்களும், அனைத்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய நாங்கள் விசாரணை நடத்துவோம். சட்டத்தை பின்பற்றாதவர்களை ஹூண்டாய் பொறுத்துக்கொள்ளாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.