“உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் ரூ. 2000-க்கு போலி மருத்துவச் சான்றிதழ்!

மதுரையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மாற்றுத்திறனாளி கொடுத்த மருத்துவச்சான்று போலி என, கண்டறியப்பட்டது. அதை, 2000 ரூபாய்க்கு வாங்கியதை அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மதுரை மாவட்டம், பேரையூரில் நடந்த, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேசன், நலத்திட்ட உதவி கேட்டு விண்ணப்பித்தார். விண்ணப்பத்தில் இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களை ஆய்வு செய்த மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதனுக்கு, மருத்துவச்சான்றின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகம் ஏற்பட்டது.

கணேசனிடம் விசாரித்ததில், எம்.கல்லுப்பட்டி அருகே பெருமாள்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கதிர்வேல், 45, என்பவரிடம், 2,000 ரூபாய் கொடுத்து சான்றிதழ் பெற்றதாக தெரிவித்தார்.

அதிர்ச்சியடைந்த சுவாமிநாதன், உடனடியாக கதிர்வேலிடம் விசாரித்தார். அதில், கணேசனுக்கு தந்த மருத்துவச்சான்று போலியாக தயாரிக்கப்பட்டது உறுதியானது.

அதை யார் தயாரித்து கொடுத்தது போன்ற விபரங்களை கதிர்வேல் சொல்ல மறுத்துவிட்டார். சுவாமிநாதன் புகாரின்படி, தல்லாக்குளம் போலீசார், கதிர்வேல் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

போலீசார் கூறுகையில், ‘கதிர்வேல் கூறினால் தான் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார், ‘நெட்வொர்க்’ ஆக செயல்படுகின்றனரா, எத்தனை ஆண்டுகளாக இதுபோன்று செயல்படுகின்றனர் என தெரியவரும்’ என்றனர்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு