சென்னையில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது, ஒரு சவரன் தங்கத்தின் விலை இப்போது ரூ. 84,000 ஆக உள்ளது!

தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், இன்று (செப் 23) ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.84,000க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 10,290 ரூபாய்க்கும், சவரன், 82,320 ரூபாய்க்கும் விற்பனையானது.

ஞாயிற்றுக்கிழமை தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று ( செப் 22) காலை தங்கம் விலை, கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 10,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 82,880 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 3 ரூபாய் உயர்ந்து, 148 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று மதியம் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய்உயர்ந்து, 10,430 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 83,000 ரூபாயை தாண்டி, 83,440 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு, 1,120 ரூபாய் அதிகரித்தது.

இந்நிலையில் இன்று (செப் 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.84,000க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்தை எட்டி நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருவது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ”சர்வதேச முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி தங்கத்தில் தொடர்ந்து அதிகளவில் முதலீடு செய்கின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘எச் 1 பி’ விசா கட்டணத்தை உயர்த்தியதும், தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. எனவே, வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும்” என்றார்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு