இலங்கையில் மழை தொடரும். நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் நிலவிய காற்றுச் சுழற்சி வலுவிழந்தது. ஆனால் இலங்கையின் தென்மேற்கு பகுதியைக் கொண்டு நிலவிய வளிமண்டல தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் கிடைத்து வரும் மழை எதிர்வரும் 13.12.2025 வரை நீடிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் எதிர்வரும் 13.12.2025 வரை கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண் சரிவு அனர்த்தம் நிகழ்வதற்கும் வாய்ப்புள்ளது. ஆகவே இந்த மண்சரிவு நிகழ்வுகள் தொடர்பாக மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம்.

அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளினதும் வளிமண்டலத்தில் ஈரப்பதன் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல இடங்களிலும் குளிரான வானிலை நிலவுகிறது.

உணரக்கூடிய வெப்பநிலையும் குறைவாகவே உள்ளது. இது மேலும் சில நாட்களுக்கு தொடரும் வாய்ப்புள்ளது. எனவே குளிரான வானிலை தொடர்பான உணர்திறன் அதிகமுள்ளவர்கள் குறிப்பாக , வயதானவர்கள், நோயாளிகள் குழந்தைகள் அவதானமாக இருப்பது சிறந்தது.

வெப்பநிலை அளவுகளில் நிலவும் சுவாரசியமான நிலைமை காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக இரத்தினபுரி மாவட்டம் அதிகூடிய வெப்பநிலையை ( சராசரியாக 31.5°C) பெறும் அதேவேளை நுவரெலியா அதிகுறைந்த வெப்பநிலையை (சராசரியாக 16°C) இனைப் பெறுகின்றது. இரண்டு பிரதேசமும் மிகப்பெரிய அளவு தூர இடைவெளியில் இல்லை. ஆனால் உயர வேறுபாடே மிகப்பெரிய வெப்பநிலை வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.

அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வாகவே காணப்படுகின்றது. இது சராசரியாக 28°C என்ற அளவில் காணப்படுகின்றது. பொதுவாக கடல் மேற்பரப்பு வெப்பநிலை 27°C இனை விட உயர்வாக இருந்தாலே கடலில் காற்றுச் சுழற்சிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 17.12.2025 அன்று வங்காள விரிகுடாவில் புதிய ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. எனினும் இதனை அடுத்த சில நாட்களுக்கு பின்பே உறுதிப்படுத்த முடியும்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 16.12.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ள, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன்,

நுவரெலியா ரம்பொட வழியாக கண்டி வீதியை இரவு வேளைகளில் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என தெரிவித்துள்ளார். தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் தொடர்ந்து மழை பெய்ந்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண் மேடு, கற்பாறைகள் சரிந்து விழுவதற்கு அறிகுறியாக அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் நுவரெலியா – கண்டி வீதியில் இரவில் குறித்த வீதியின் ஊாடக பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

ஆனந்தபுரம் வீரத்தின் விளைநிலம்

புனித வாரத்தை சேவை மற்றும் புதுப்பிப்பின் அழைப்புடன் தொடங்கிய போப் லியோ

டிரம்ப் எச்சரிக்கைக்கு பதிலளித்த ஈரான்: “அதிகக் கொடூரமான தாக்குதல்கள் வரும்” என எச்சரிக்கை