
07.06.2025 – ஸ்ருற்காட் யேர்மனி
கலைகளின் ஊடாகத் தன்னையும் தனது சூழலையும் பதிவு செய்வதிலும் வினவுதலுக்குட்படுத்துவதிலும் உலகம் பின்னிற்பதில்லை. அவை தலைமுறைகள் வழியே கடத்தப்பட்டு வருவதோடு, புதிய நுண்ணறிவுசார் புலமைகளை உள்ளீர்ந்தவாறு செழுமை பெற்றுத் திகழ்கின்றன. தமிழர் கலைகள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பயணித்து வருகின்றன. தமிழர்கள் புலம்பெயர்ந்து வேற்று மொழி, கலை மற்றும் பண்பாட்டுச் சூழலுள் சிக்குண்டபோதும் தம்மைத் தகவமைத்துக் கொள்வதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்து வருவதற்கு மற்றுமொரு சான்றாக யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி திகழ்கின்றது.
தமிழரது கலைகளைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டுணரவும் அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாது காக்கவும், கலை அரங்காற்றுகை செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளை அறிந்துகொள்ளவும் பயிலவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவு கலைத்திறன் போட்டியை நடாத்தி வருகிறது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம் மற்றும் விடுதலை நடனம், விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு ஆகிய ஒன்பது கலைகள் போட்டிகளாக நடைபெறுகின்றன. தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறியமைப்பில் தென்மாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியரங்கம் ஸ்ருற்காட் நகரிலே பொதுச்சுடர் ஏற்றலோடு தொடங்கியது.
சிறந்த காலநிலையோடு காலைப்பொழுதிலே அரங்கம் நிறைந்திருக்கக் கலைத்திறனோடு களமாடிய தமிழாலய மாணவர்கள் குழுநிகழ்வுகளுக்கு நிகராகத் தனியொருவராகப் பங்குபற்றும் வாய்ப்பாட்டு மற்றும் விடுதலைப்பாடல் போட்டிகளிலும் தனித்தன்மையை அரங்கிலே பதிவு செய்தனர். நாட்டார் பாடல், திருப்புகழ் மற்றும் விடுதலைப் பாடல்களை மனனம் செய்து பாடினர். குறிப்பாக விடுதலைப் பாடல்களைப் புலத்திலே பிறந்து வளர்ந்துவரும் மூன்றாந்தலைமுறைக் குழந்தைகள் பாடியபோது, அரங்கிலே பார்வையாளர்கள் அமைதிபேணி அவர்களை ஒன்றித்திருக்க வைத்ததோடு, அவர்களது பாராட்டையும் தமதாக்கினர்.
போட்டியரங்கிலே பங்கேற்புக்கான மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டதோடு, வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்புகளும் நடைபெற்ற அதேவேளை, தென்மாநிலத்திலே முறையே முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய முன்சன், ஸ்ருற்காட் மற்றும் நூர்ன்பேர்க் தமிழாலயங்களை அரங்கிற்கு அழைத்துப் பாராட்டிதழ் வழங்கப்பட்டது. இவர்களுக்கான சிறப்பு மதிப்பளிப்பு தமிழ்க் கல்விக் கழகத்தின் 35 அகவை நிறைவு விழா அரங்கிலே வழங்கப்படும்.
01.03.2025ஆம் நாளன்று தென்மாநிலத் தமிழாலயங்களுக்கான கலைத்திறன் போட்டி 08:30 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கி 21:30 மணிக்குத் தமிழரது நம்பிக்கையை ஓங்கி ஒலித்தவாறு நிறைவுற்றது. தமிழ்க் கல்விக் கழகத்தின் திட்டமிடலுக்கேற்ப ஐந்து மாநிலங்களில் வடமத்தி, மத்தி, தென்மேற்கு மற்றும் தென்மாநிலங்களின் போட்டிகள் நிறைவுற்றுள்ளன. வடமாநிலத் தமிழாலயங்களுக்கிடையேயான கலைத்திறன் போட்டியை ஏப்பிரல் மாதத்தில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.




























பகிரவும்: