
நாக்பூரில் இன்று பகலிரவாக நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து களமிறங்குகிறது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.
சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுவிட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான சீனியர் இந்திய அணி என்ன செய்யப் போகிறது, ரோஹித் சர்மா, விராட் கோலி இழந்த ஃபார்மை மீட்பார்களா, ஒருநாள் தொடரை வெல்லுமா என்ற பல எதிர்பார்ப்புகளுடன் ஒருநாள் தொடர் தொடங்குகிறது.
தோல்விகளுடன் தொடரும் ரோஹித் தலைமை
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பைக்குப்பின் எந்தத் தொடரையும் வெல்லவில்லை. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 27 ஆண்டுகளுக்குப்பின் இழந்தது இந்திய அணி. நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடர் என எதையும் வெல்லவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப்பின் மீண்டும் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.
50 ஓவர்கள் ஃபார்மெட்
சீனியர் அணியில் இருக்கும் பல வீரர்கள் கடந்த 6 மாதங்களாக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிவிட்டு உடனடியாக ஒருநாள் போட்டிக்கு எவ்வாறு தகவமைத்து விளையாடுவார்கள் என்பதும் எதிர்பார்ப்புக்குரியது.
டி20 போட்டிகளில் 4 ஓவர்கள் வீசினால் போதுமானது, ஒரு சினிமா பார்க்கும் நேரம் களத்தில் இருந்தால் போதுமானது. ஆனால், ஒருநாள் போட்டி அப்படியல்ல, ஒரு பந்துவீச்சாளர் 10 ஓவர்கள் வீச வேண்டும், பேட்டர் என்றால் இக்கட்டான நேரத்தில் நீண்டநேரம் களத்தில் இருந்து அணியை மீட்க வேண்டும். நீண்டநேரம் களத்தில் நிற்க வேண்டிய சூழல் இதில் இருக்கும். இதற்கு வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதிருக்கிறது.
- கடைசி வாய்ப்பாக இருக்குமா?
இதைவிட முக்கியமானது வரும் 19ம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இந்திய அணி தன்னை தயார் செய்துகொள்ள கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு.
சாம்பியன்ஸ் டிராபி என்பது ஏறக்குறைய மினி உலகக் கோப்பை போன்றதுதான். இதில் இந்திய அணி சிறப்பாக செயல்பட இங்கிலாந்துடன் 3 ஒருநாள் போட்டிகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக இழந்த ஃபார்மை மீட்க கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பாகவும் இருக்கும்.
ரோஹித் சர்மா- கோலியின் கவலைக்குரிய ஃபார்ம்
ஆஸ்திரேலியத் தொடர், நியூசிலாந்து டெஸ்ட் தொடர் இருவருக்குமே மோசமாக அமைந்திருந்தது.
ரஞ்சிக் கோப்பையில் விளையாட இருவருக்கும் அறிவுறுத்தப்பட்ட நிலையில் அங்கும் இருவரும் சோதனையாக அமைந்தது. ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பை அணியில் களமிறங்கிய ரோஹித் சர்மா 3, 28 ரன்களில் ஆட்டமிழந்தார். ரயில்வேஸ் அணிக்கு எதிராக டெல்லி அணிக்காக விளையாடிய விராட் கோலி 6 ரன்னில் ஆட்டமிழந்தார். 2012ம் ஆண்டுக்குப்பின் ரஞ்சிக் கோப்பைத் தொடரில் ஆடிய கோலிக்கு மோசமானதாக அமைந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ஆட்டமிழக்கும் முறை, வைரலாகியுள்ளது. ஒரு பேருந்து ஓட்டுநர்கூட கோலிக்கு ஆஃப் சைடில் 4வது, 5வது ஸ்டெம்பில் வீசினால் ஆட்டமிழந்துவிடுவார் என்று ஆலோசனை தெரிவிக்கும் அளவுக்கு மாறிவிட்டது என்று ரயில்வேஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹிமான்சு சங்வான் தெரிவித்துள்ளார்.
விராட் கோலியும் தனது பேட்டிங்கில் இருக்கும் தவறுகளையும், ஆஃப் சைடில் தொடர்ந்து ஆட்டமிழக்கும் தவறை திருத்தும் வகையில் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரிடம் பயிற்சி எடுத்தார். அப்படியிருந்தும் ரஞ்சித் தொடரில் கோலியால் களத்தில் 15பந்துகளுக்கு மேல் நிலைக்கமுடியவில்லை.
இருவருக்கும் ரஞ்சிக் கோப்பைத் தொடரும் கைகொடுக்கவில்லை. இன்னும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபிக்கான இறுதிப் பட்டியலை ஐசிசியிடம் வழங்கவில்லை, 12ம் தேதிதான் வழங்குகிறது. கோலி, ரோஹித்தின் ஆட்டத்தைப் பார்த்து பிசிசிஐ 12-ஆம் தேதிக்குள் முக்கிய முடிவையும் எடுக்கலாம்.
ஆகஸ்ட் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சா்மா 157 ரன்கள் சேர்த்தார். அதற்கு முன்பாக 2023 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் 597 ரன்கள் சேர்த்திருந்தார். இதுதான் ரோஹித் கடைசியாக சிறப்பாக ஆடிய தொடராகும்.
விராட் கோலி கடைசியாக ஆடிய இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியிலும் சேர்த்து 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், 2023 உலகக் கோப்பைத் தொடரில் கோலி சிறப்பாக ஆடி 765 ரன்கள் சேர்த்தார்.
ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை வேகமாக அடைந்த வகையில் சச்சின்டெண்டுல்கர் 350 இன்னிங்ஸ்களிலும், குமாரா சங்கக்கார 378 இன்னிங்ஸ்களிலும் அடைந்தனர். விராட் கோலி இருவரின் சாதனையையும் முறியடிக்க இன்னும் 94 ரன்கள்தான் தேவை. கோலி 94 ரன்களை அடைந்தால், 283 இன்னிஸ்களில் 14 ஆயிரம் ரன்களை வேகமாக அடைந்த வீரர் எனும் சாதனை படைப்பார்.
ஆதலால் ரோஹித் சர்மா, கோலி இருவரின் ஃபார்மை வைத்தும், இந்தத் தொடரில் இருவரும் எவ்வாறு பேட் செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்து சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணிக்கு எவ்வாறு அமையும் என ஊகித்துவிடலாம்.
விக்கெட் கீப்பர் போட்டி
இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது இந்திய அணி. 2023 உலகக் கோப்பைத் தொடரில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராகவும், நடுவரிசையிலும் களமிறங்கி அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பந்த் விபத்திலிருந்து மீண்டு வந்தாலும் இதுவரை பெரிதாக எந்த இன்னிங்ஸிலும் ரன்கள் சேர்க்கவில்லை.
சுப்மான் கில், ரோஹித் தொடக்க வீரர்களாகவும், 3வது வரிசையில் விராட் கோலி, 4வது வீரராக ஸ்ரேயாஸ் அய்யர், 6-வது வீரராக ஹர்திக் பாண்டியா வரை உறுதியாகியுள்ள நிலையில் 5வது வீரராக கே.எல்.ராகுல் அல்லது ரிஷப் பந்த் இருவரில் யார் ப்ளேயிங் லெவனில் வரப்போகிறார்கள் என்ற கேள்வி இருக்கிறது.
இடதுகை பேட்டர் டாப்-6 பேட்டர்களில் தேவை என்றால் மட்டுமே ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்படலாம். மற்றவகையில் ரிஷப் பந்த் ஃபார்ம் மோசமாகவே இருக்கிறது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருவருமே அணியில் இருந்தும் இருவருமே பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் இருவரும் சராசரியாக 270 ரன்கள்தான் சேர்த்தனர். ரஞ்சிக் கோப்பைத் தொடரில் கர்நாடகா அணிக்காக ஆடிய ராகுல், ஹரியானா அணிக்கு எதிராக 26, 43 ரன்கள் சேர்த்தார். ரிஷப்பந்த் டெல்லி அணிக்காக களமிறங்கி சவுராஸ்டிரா அணிக்கு எதிராக 1,17 ரன்கள்தான் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்துள்ளார்.
பேட்டிங்கைப் பொருத்தவரை ரிஷப் பந்த் எந்தநேரத்தில் ஃபார்முக்கு வருவார் என்று கணிக்க முடியாதது. ஆனால், ராகுல் நிதானமாக பேட் செய்யக் கூடியவர். ரிஷப் பந்தை சேர்த்து, ராகுலையும் ஸ்பெசலிஸ்ட் பேட்டராக சேர்த்தால், ஸ்ரேயாஸ் அய்யரை நீக்க வேண்டியதிருக்கும். ஆதலால் ராகுல், ரிஷப் பந்த் இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு இருக்கும்.
ஜடேஜாவுக்கு இடம் கிடைக்குமா
2023 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் ரவீந்திர ஜடேஜா இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் இங்கிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜடேஜாவுக்கு மெல்ல ஓய்வுஅளிக்கும் வகையில் அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தரை பிசிசிஐ வளர்த்து வருகிறது.
ஒருநாள் போட்டிகளில் வாஷிங்டன் சுந்தரின் ஆஃப் ஸ்பின் முக்கியத் துருப்புச்சீட்டாக இருக்கும். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாஷிங்டன் அருமையாக பந்துவீசியிருந்தார்.இடதுகை சுழற்பந்துவீச்சில் அக்ஸர், ஜடேஜா இருவரில் ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படலாம்.
ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து திரும்பிய ஜடேஜா ரஞ்சிக் கோப்பைத் தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக ஆடி, 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அருமையான ஃபார்மில் இருக்கிறார். ஜடேஜாவின் அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்கு பலமாக அமையும். ஆனால், லேசான முதுகுபிடிப்பால் ஜடேஜா ஓய்வில் இருக்கிறார். அவர் உடற்தகுதி பெற்றால், ஜடேஜா, அக்ஸர், வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் ஆகியோர் விளையாடலாம்.
பந்துவீச்சாளர்கள் உடற்தகுதி எப்படி இருக்கிறது?
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள் உடற்தகுதி கவனிக்கப்படுகிறது. 2023 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின், முகமது ஷமி இந்திய அணியில் விளையாடவில்லை, அறுவை சிகிச்சையால் ஓய்வில்இருந்த நிலையில் ஓர்ஆண்டுக்குப்பின் இந்திய அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.
அதேபோல குல்தீப் யாதவும் சிறிய அறுவை சிகிச்சைக்குப்பின் ஓய்வு முடிந்து இப்போது அணிக்குத் திரும்பியுள்ளார். இருவரின் உடற்தகுதி இந்தத் தொடரில் உன்னிப்பாக கவனிக்கப்படும். பும்ராவுக்குப் பதிலாக வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்துள்ளது. அதேசமயம், ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி என 5 சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபிக்கு வருணை தயார் செய்யும் நோக்கில் அவருக்கு வாய்ப்பு வழங்கி பரிசோதிக்கலாம்.
ஒட்டுமொத்தத்தில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதி வீரர்கள் பட்டியலை ஆய்வு செய்து தயாரிக்கவும், தயாராகவும் இந்த ஒருநாள் தொடர் உரைகல்லாக அமையும்.
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை டி20 தொடரில் களமிறங்கிய அணியில் பெரும்பாலும் மாறாமல் ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. முன்னாள் கேப்டன் ஜோ ரூட் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதில் சிறப்பு என்னவென்றால், 2024ம் ஆண்டில் ஜாஸ் பட்லரும், ஜோ ரூட் இருவரும் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடவே இல்லை.
செப்டம்பரில் ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடர் தோல்வி, அக்டோபரில் வங்கதேசத்திடம் தோல்வி, நவம்பரில் மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் தோல்வி என இ்ங்கிலாந்து அணியின் ஒருநாள்போட்டி ஃபார்ம் மோசமாகவே இருக்கிறது.
மெக்கலம் பயிற்சியாளராக வந்தபின், இங்கிலாந்து அணி பேஸ்பால் ஆட்டத்தைக் கையாண்டு வெற்றி பெறுவது “எக்ஸ் பேக்டர்” ரீதியில்தான் இருக்கிறது. தோல்வியிலும் முடியலாம், வெற்றியும் கிடைக்கலாம் என்ற ரீதியில்தான் பேஸ்பால் அணுகுமுறையை கையாள வேண்டியுள்ளது.
நாக்பூர் மைதானம் எப்படி ?
நாக்பூர் விதர்பா மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரும்பாலும் ஒத்துழைக்கும். அதேசமயம் ஒருநாள் போட்டி என்றால் வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சுக்கு சமபங்கு ஒத்துழைக்குமாறு அமைக்கப்படும். இந்த மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் 69 விக்கெட்டுகளையும், சுழற்பந்துவீச்சாளர்கள் 53 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளதால் சமமாக இருக்கும்.
பேட்டிங்கிற்கும் ஒத்துழைக்காது எனக்கூற முடியாது. இந்த மைதானத்தில் இதுவரை 9 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 3 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன, சேஸ் செய்த அணிகள் 6 முறை வென்றுள்ளன.
இந்திய அணி கடைசியாக ஆடிய 3 ஒருநாள் போட்டிகளிலும் அதாவது 2013 முதல் ஆடிய 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகஆடியது. அனைத்திலும் வென்றுள்ளது. அதாவது 12 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் இந்திய அணி தோற்கவில்லை. அதேசமயம் 2009ல் இலங்கைக்கு எதிராகவும், 2011ல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும் இந்திய அணி தோற்றுள்ளது.
இந்த மைதானத்தில் சராசரியாக 290 ரன்கள் வரை அடிக்க முடியும். அதிகபட்சமாக 351 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2013ல் இந்திய அணி சேஸ் செய்துள்ளது. இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்றால் சேஸிங் செய்வதுதான் சிறப்பானதாகும்.
ஆட்டம் எப்போது தொடங்கும்? அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்கள் யார் யார்?
இந்திய அணி ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மான் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப், வருண் சக்ரவர்த்தி
இங்கிலாந்து (ப்ளேயிங் லெவன்)
ஜாஸ் பட்லர்(கேப்டன்), பென் டக்கெட், பில் சால்ட், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், ஜேக்கப் பெத்தெல், பிரைடன் கார்ஸ், ஜோப்ர ஆர்ச்சர், அதில் ரஷீத், சகிப் மெஹ்மூத்
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.
பகிரவும்: