
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இந்தியர்களைக் கைவிலங்கிட்டு அழைத்து வந்த விதம் மனிதத்தன்மையற்றது, இதை பாஜக அரசு தவிர்க்க நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று கூறி, இன்று (பிப்ரவரி 06) நாடாளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
காங்கிரஸ், சமாஜ்வாதி, இந்தியக் கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மக்களவை சபாநாயகர் அனைவரையும் இருக்கையில் அமரும்படி கூறினார். ஆனால் அமளி தொடர்ந்ததால், அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் விளக்கமளித்துள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய ஜெய் சங்கர், ”திருப்பி அனுப்பப்படும் இந்திய குடியேறிகள் எந்த வகையிலும் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்” என்றார்.
மேலும், அவர்கள் அளிக்கும் தகவலின்படி, அவர்களை அனுப்பிய முகவர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
அமைச்சர் ஜெய் சங்கர் பேசியது என்ன?
”நாடு கடத்தப்படும் செயல்முறை புதிதானது அல்ல. பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2009இல் இருந்து அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் விவரங்களை அளிக்க விரும்புகிறேன்.
ஆண்டுவாரியாக அந்த எண்ணிக்கை நம் அதிகாரிகளிடம் உள்ளது. 2009ல் 734 பேர், 2010ல் 799 பேர், 2011ல் 599 பேர், 2012ல் 530 பேர், 2013ல் 515 பேர், 2014ல் 591 பேர், 2015ல் 708 பேர், 2016ல் 1303 பேர், 2017ல் 1024 பேர், 2018ல் 1180 பேர், 2019ல் 2042 பேர், 2020ல் 1889 பேர், 2021ல் 805 பேர், 2022ல் 862 பேர், 2023ல் 617 பேர், 2024ல் 1368 பேர், 2025ல் 104 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்,” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவால் செய்யப்படும் நாடு கடத்தலை அந்நாட்டின் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு, “நாடு கடத்தலுக்கான அதன் நிலையான நடைமுறை 2012 முதல் அமலில் உள்ளது. அந்த நடைமுறை, நாடு கடத்தப்படுபவர்களைக் கட்டுப்பாடுகளுடன் அழைத்துவர அனுமதி அளிக்கிறது. எனினும், குழந்தைகள், பெண்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என அமெரிக்கா எங்களிடம் தெரிவித்தது.
மேலும், “கைவிலங்கிடப்பட்டு அழைத்துவரப்படுவோருக்கு உணவு, மருத்துவத் தேவை, கழிவறை பயன்படுத்துதல் உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது தற்காலிகமாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்” என்றும் கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இது பொதுமக்கள் விமானம் மற்றும் ராணுவ விமானங்களுக்கும் பொருந்தும். மேற்கொண்டு பேசிய ஜெய்சங்கர், “பிப்ரவரி 5ஆம் தேதி அமெரிக்கா அனுப்பிய விமானத்தில் கடந்த கால செயல்முறை தவிர்த்து எந்த மாற்றங்களும் இல்லை. எனினும், திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் எந்த வகையிலும் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்” என்று கூறினார்.
மக்களவையில் என்ன நடந்தது?
முன்னதாக, மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா மாணிக்கம் தாக்கூர் ஒத்தி வைப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதே விவகாரத்தில், காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகாயும் ஒத்திவைப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படும் விதம் மிக வருத்தமாகவும், அவமானகரமானதாகவும் இருப்பதாக அவர் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
“கடந்த ஆண்டு குடியேற்ற விவகாரம் தொடர்பாக பேசியிருந்தேன், நாட்டில் போதிய ஆதரவும் வாய்ப்புகளும் இல்லாததால் இந்த நிலைமைகள் உருவாகியுள்ளன. இதனால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல எதிர்காலத்தைத் தேடி பலரும் ஆபத்தான வழிகளை தேர்ந்தெடுக்கின்றனர்” என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குர்ஜீத் சிங் அவுஜுலாவும் இந்த விவகாரத்தில் தனது கடுமையான கண்டனங்களை மக்களவையில் பதிவு செய்திருந்தார்.
“கைகளிலும் கால்களிலும் விலங்கிட்டு இந்தியர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருப்பது மிகவும் அவமானகரமான செயல். இது அரசின் தோல்வியாகும். அரசுக்கு இப்படி ஒரு விமானம் வருகிறது என்று முன்பே தெரியும். இது குறித்த ஆலோசனைகளை நடத்தியிருக்க வேண்டும்,
அவர்களை அனைவரையும் போக்குவரத்து விமானத்தில் அழைத்து வந்திருக்க வேண்டும். அவர்கள் மோசமான குற்றவாளிகள் அல்ல, அவர்கள் அங்கு ஏதும் குற்றம் செய்யவில்லை. அவர்கள் எல்லை தாண்டி வேறு ஒரு நாட்டுக்கு சென்றுள்ளனர்” என்று அவர் பேசினார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஷஷி தரூர், “இந்தியர்களை திருப்பி அனுப்புவது முதல் முறை அல்ல, முந்தைய பைடன் அரசின் போது கடந்த ஆண்டு 1100 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தம் நாட்டு விதிகளை மீறியவர்களை திருப்பி அனுப்ப அமெரிக்காவுக்கு உரிமை உள்ளது. ஆனால் அவர்கள் அனுப்பப்பட்ட விதம் தான் பிரச்னை. அவர்கள் குற்றவாளிகள் அல்ல, தீய நோக்கங்கள் கொண்டவர்கள் அல்ல” என்று கூறினார்.
திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள்
அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாக குற்றம்சாட்டப்பட்ட, இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்நாட்டின் சி17 எனும் ராணுவ விமானம் மூலம் நேற்று மதியம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு டெக்சாஸிலிருந்து புறப்பட்ட ராணுவ விமானம், அமிர்தசரஸ் நகருக்கு வந்தது. நாடுகடத்தப்பட்டவர்களை கையாள தேவையான செயல்முறைகள் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிபிசிக்கு செய்திகளை வழங்கிவரும் ரவீந்தர் சிங் ராபின் கூறுகையில், இதையொட்டி விமான நிலையத்தின் உள்ளே ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின், இவ்வாறு இந்திய சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது இதுவே முதன்முறை.
தனி நபர்களை தங்களது சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்ப டிரம்ப் அமெரிக்க ராணுவ விமானங்களை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்.
அமெரிக்காவில் உள்ள ஆவணங்களற்ற புலம்பெயர் இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து கருத்து வேறுபாடு உள்ளது.
பியூ ஆய்வு மையத்தின் புதிய தரவுகள் 2022-ல் 725,000 இந்தியர்கள் இருப்பதாக கணிக்கிறது. இது அவர்களை மெக்ஸிகோ மற்றும் எல் சல்வடாருக்கு அடுத்து மூன்றாவது பெரிய குழுவாக்குகிறது
இதற்கு மாறாக, மைகிரேஷன் பாலிஸி இன்ஸ்டிடியூட் இந்த எண்ணிக்கையை 375,000 என கணக்கிடுறது. இது குடியேறிகளின் பூர்வீக நாடுகள் வரிசையில் இந்தியாவை ஐந்தாவது இடத்தில் நிறுத்துகிறது. அனுமதியற்ற குடியேறிகள் அமெரிக்காவின் மக்கள் தொகையில் 3%-ஆகவும், வெளிநாட்டில் பிறந்தவர்கள் எண்ணிக்கையில் 22% ஆகவும் உள்ளனர்.
ராணுவப் பயன்பாடு
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப ராணுவம் பயன்படுத்தப்படுவது மிகவும் அரிதானது. ஆனால், டிரம்பின் இரண்டாவது ஆட்சியில் சட்டவிரோத குடியேறிகளைத் திருப்பி அனுப்ப ராணுவம் பயன்படுத்தப்படுகிறது.
முன்னதாக, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் ராணுவ அலுவலகத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
அதேநேரம், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேறிகளைத் திருப்பி அனுப்புவதற்கும் ராணுவம் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக, அமெரிக்கா குடிவரவுத் துறைதான் சட்ட விரோத குடியேறிகளை அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும்.
ஆனால், ராணுவம் மூலம் இந்தப் பணியை மேற்கொள்வது செலவு மிகுந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் குவாட்டமாலாவுக்கு சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்க ராணுவம் திருப்பி அனுப்பியது. இதனால், ஒரு நபருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 லட்சம் வரை செலவானது.
டிரம்பின் கவலையும் இந்தியாவின் பதிலும்
பிரதமர் மோதியுடன் கடந்த வாரம் தொலைபேசியில் பேசிய டொனால்ட் டிரம்ப் மற்றும் வெளியுறவு துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ, அமெரிக்காவில் வாழ்ந்துவரும் சட்டவிரோத இந்திய குடியேறிகள் குறித்து கவலை தெரிவித்தனர்.
இதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், “அமெரிக்காவில் ஆவணங்களின்றி வசிக்கும் இந்தியர்கள் குறித்து இந்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என தாங்கள் நம்புவதாக” தெரிவித்தார்.
பிப்ரவரி மாதம் மோதி அமெரிக்காவுக்கு வருகை தருவார் எனவும் டிரம்ப் கூறினார்.
அமெரிக்க வெளியுறவு துறை செயலாளரும் இவ்விவகாரம் குறித்து, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் எழுப்பினார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய எஸ் ஜெய்சங்கர், “சட்டவிரோதமாக புலம்பெயர்வதை இந்தியா எப்போதும் ஆதரிக்காது. இத்தகைய குடியேற்றம் பலவித சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இது இந்தியாவின் புகழுக்கு நல்லதல்ல. அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியர்கள் குடியேறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை இந்தியாவுக்கு சட்டபூர்வமாக அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்.” என்றார்.
குடியேற்றம் தொடர்பான டிரம்பின் உத்தரவுகள்
டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக குடியேற்ற விவகாரம் இருந்து வந்தது. “குடியேற்ற விதிகளை கடுமையாக்குவோம், ‘மெக்சிகோவிலேயே இருங்கள்’ என்ற தனது முந்தைய ஆட்சியில் அமல்படுத்திய கொள்கையை நடைமுறைப்படுத்துவோம், எல்லையில் பாதுகாப்பும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்” என்பன டிரம்பின் தேர்தல் வாக்குறுதிகளாக இருந்தன.
டிரம்ப் அதிபரான முதல் நாளில் கையெழுத்திட்ட உத்தரவுகளில் குடியேற்றம் சம்பந்தப்பட்ட உத்தரவுகள் முக்கியமானவை. “அமெரிக்க வரலாற்றில் நாட்டைவிட்டு பெருமளவில் நிகழ்த்தப்படும் வெளியேற்றத் திட்டத்தை” அதிபராகத் தனது முதல் நாளிலேயே தொடங்கப் போவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
நாட்டின் தெற்கு எல்லைப் பகுதியில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாக அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படுவதற்கு எதிராகவும் அவர் உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்க அகதிகள் மறுகுடியமர்த்தல் திட்டத்தை நான்கு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கும் உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
எல்லையை மூடும்படி ராணுவத்துக்கு உத்தரவிட்ட டிரம்ப், சட்டவிரோத போதைப் பொருட்கள், மனிதக் கடத்தல், எல்லையைக் கடக்கும் குற்றங்கள் உள்ளிட்டவற்றை அதற்கு காரணமாகக் கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் சர்வதேச சட்டவிரோத கும்பல்களை அந்நிய பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கும் உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
‘மெக்சிகோவிலேயே இருங்கள்’ என்ற தனது கொள்கையை முதல் நாளிலேயே ஒரு செயல் உத்தரவு மூலம் டிரம்ப் அமல்படுத்தினார்.
அவரது முதல் ஆட்சிக்காலத்தின் நடவடிக்கைகளில் ஒன்றான இதன் மூலம், எல்லைக்கு வெளியே தஞ்சம் கேட்கத் தங்களது முறைக்காக காத்திருந்த சுமார் 70,000 மெக்சிகோவை சேராதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கடந்த வாரம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் கொலம்பியா நாட்டவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியது.
அமெரிக்க ராணுவ விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்காத அந்நாட்டின் அதிபர், தங்கள் நாட்டு குடிமக்களை ராணுவ விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கக்கூடாது எனவும், தன்னுடைய விமானத்தையே அவர்களுக்காக அனுப்பத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
வரி விதிப்பு குறித்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்திருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் ராணுவ விமானங்கள் மூலம் குடியேறிகளை ஏற்றுக்கொள்ள கொலம்பியா ஒப்புக்கொண்டது. அதற்கு அடுத்த முறை, கொலம்பியா தனது விமானப் படையின் விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டவரை திருப்பி அழைத்து வந்தது.
ராய்ட்டர்ஸ் முகமையின் செய்திப்படி, கொலம்பியா தவிர்த்து, குவாட்டமாலா, பெரு, ஹோண்டுராஸ் ஆகிய இடங்களுக்கு அமெரிக்க ராணுவ விமானம் சட்டவிரோத குடியேறிகளைத் திருப்பி அனுப்பியுள்ளது.
பகிரவும்: