
டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 5 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் தற்போது தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது வரை வெளியான முடிவுகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று, 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி, 19 தொகுதிகளில் வெற்றி பெற்று, 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2025
பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்- 36
- ஆம் ஆத்மி22Seat count of ஆம் ஆத்மி22
- பாஜக+48Seat count of பாஜக+48
- காங்கிரஸ்0Seat count of காங்கிரஸ்0
- மற்ற கட்சிகள்0Seat count of மற்ற கட்சிகள்0
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட நேரம்: 11:53 am
சமீபத்திய முடிவுகளைக் காண இந்த பக்கத்தை புதுப்பிக்கவும்.
ஆட்சி அமைக்கத் தேவையான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருவதைத் தொடர்ந்து கட்சி அலுவலகங்களில் பட்டாசுகளை வெடித்து வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர் பாஜக தொண்டர்கள்.
பிப்ரவரி 5-ம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதன் முடிவுகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்து வருகிறது.
முக்கிய தலைவர்களின் நிலை என்ன?
- டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி புது டெல்லி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தோல்வியடைந்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மா வெற்றி பெற்றுள்ளார்.
- கால்காஜி தொகுதியில் டெல்லி முதல்வர் ஆதிஷி, பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
- ஆம் ஆத்மி கட்சியின் கோபால் ராய், பாபர்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பாஜகவின் அனில் குமார் வஷிஷ்தை எதிர்த்து போட்டியிட்டார்.
- ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு தலைவரான சௌரப் பரத்வாஜ், கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் சிக்கா ராய் வெற்றி பெற்றுள்ளார்.
- பத்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மியின் ஆவாத் ஓஜா தேர்தலில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட ரவீந்திர் சிங் நெகி வெற்றி பெற்றுள்ளார்.
ஜங்பூராவில் தோல்வி அடைந்த சிசோடியா
ஜங்பூரா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லியின் முன்னாள் துணை முதல் அமைச்சருமான மணீஷ் சிசோடியா 600 வாக்குகள் வித்யாசத்தில் தோல்வியுற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
“ஜங்பூரா தொகுதியில் நாங்கள் கடுமையாக போட்டியிட்டோம். 600 வாக்குகள் வித்யாசத்தில் நாங்கள் தோல்வி அடைந்தோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்,” என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்பு போட்டியிட்ட தொகுதியில் இருந்து மாறி முதல்முறையாக ஜங்பூராவில் போட்டியிட்டார் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் சிசோடியா. அவரை எதிர்த்து பாஜக சார்பில் தர்விந்தர் சிங் களம் இறக்கப்பட்டார். பாஜக தற்போது வெற்றியை உறுதி செய்துள்ளது.
ஓக்லா தொகுதியில் முன்னிலை வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி
தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய அறிவிப்புப்படி ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி, அந்த தொகுதியின் எம்.எல்.ஏவான அமானத்துல்லா கானை களம் இறக்கியது. அந்த தொகுதியில் அமானத்துல்லா முன்னிலை வகித்து வருகிறார்.
காங்கிரஸ் சார்பில் அரிபா கான் களம் இறக்கப்பட்டார். அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி டெல்லி கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டு சிறை சென்ற ஷிஃபா-உர் ரெஹ்மானை களத்தில் இறக்கியது. ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி இந்த தொகுதியில் தன்னுடைய வேட்பாளரை இறக்கியதால் இந்த தொகுதி பேசுபொருளாக மாறியது.
ஓக்லா தொகுதியில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் கடுமையான போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி தோல்வி குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறியது என்ன?
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். இந்த வெற்றிக்காக பாஜக-வுக்கு எனது வாழ்த்துகள். எங்களுக்கு வாக்களித்தவர்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்,” என்று கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
“கடந்த பத்து ஆண்டுகளில் மக்கள் எங்களுக்கு வழங்கிய வாய்ப்பில் நாங்கள் நிறைய பணிகளைச் செய்துள்ளோம். கல்வி, சுகாதாரம், நீர்வளத் துறை மற்றும் டெல்லியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நாங்கல் பணியாற்றினோம்.
இப்போது மக்கள் எங்களுக்கு இந்த முடிவை வழங்கியுள்ளனர். நாங்கள் ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவது மட்டுமின்றி, சமூக சேவையையும் செய்வோம்,” என்று தனது வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதோடு, “மக்களின் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் உதவுவோம். நாங்கள் யாருக்கெல்லாம் தேவைப்படுகிறோமோ அவர்கள் அனைவருக்கும் உதவுவோம். ஏனெனில், நாங்கள் அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை. அரசியலை மக்களுக்கு சேவை செய்யவும், அவர்களி சுக, துக்கங்களில் உதவவும் பயன்படும் ஓர் ஊடகமாகக் கருதுகிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி தேர்தல் முடிவுகள் பற்றி பிரதமர் மோதி கூறுவது என்ன?
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் இருக்கும் முன்னிலை நிலவரம் மற்றும் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோதி கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, இதை வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் வெற்றி என்று கூறியுள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில், “நல்லாட்சி வென்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ள அவர், “பாஜகவுக்கு வரலாற்று வெற்றியை வழங்கிய டெல்லியின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என வாழ்த்துகள். நீங்கள் அளித்த ஏராளமான ஆசீர்வாதங்களுக்கும் அன்புக்கும் மிக நன்றியுள்ளனவனாக இருக்கிறேன்.
டெல்லியின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் அதன் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் இருக்கும் வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
ஊழலே தோல்விக்கு காரணம் – அன்னா ஹசாரே
சமூக செயற்பாட்டாளரான அன்னா ஹசாரே, ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகளே இந்த தேர்தல் பின்னடைவுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடும் இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய அவர், “ஆரம்ப காலம் தொட்டே நான் இதைக் கூறி வருகிறேன். தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் சுத்தமானவராக இருக்க வேண்டும். சுத்தமான எண்ணங்களும், கறைபடாத வாழ்க்கையையும், அவமானங்களை தாங்கிக் கொள்ளக் கூடியவராகவும் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் இருந்தால் மட்டுமே, அந்த வேட்பாளர் நமக்கு ஏதேனும் செய்வார் என்ற நம்பிக்கை வாக்காளர்கள் மத்தியில் கிடைக்கும்,” என்று கூறினார்.
மேற்கொண்டு பேசிய அவர், “இதை நான் கூறிக் கொண்டே இருந்தேன். ஆனால் அது அவர்களின் மனதில் ஏறவில்லை. பிறகு ஒரு நாள் மதுபானம் தொடர்பான பேச்சு அடிபட்டது. மதுபானக் கொள்கைகள் காரணமாகவே கேஜ்ரிவாலுக்கு மோசமான பெயர் கிடைத்தது,” என்றும் குறிப்பிட்டார்.
அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு பக்கம் குணாம்சம் குறித்து பேசுகிறார். மற்றொரு பக்கம் மதுபான ஊழலில் அவருடைய பெயர் அடிபடுகிறது என்பதை மக்கள் பார்த்தனர். அரசியலில் குற்றச்சாட்டுகள் எழுவது நிதர்சனம். ஒருவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால் உண்மை என்றும் உண்மையாகவே இருக்கும். ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது, நான் கட்சியின் ஒரு அங்கமாக இருக்கமாட்டேன் என்பதை தெளிவுபடுத்தினேன். அதையே நான் இன்றுவரை கடைபிடித்து வருகிறேன், என்று அவர் தெரிவித்தார்.
ஆம் ஆத்மியிடம் இருந்து மக்கள் டெல்லியை விடுவித்துள்ளனர் – அமித் ஷா
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக முன்னிலை வகிப்பது குறித்துப் பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பொய்யான வாக்குறுதிகளின் மூலம் தங்களைத் தொடர்ந்து தவறாக வழிநடத்த முடியாது என்பதை டெல்லி மக்கள் காட்டியுள்ளனர்,” என்று கூறியுள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, “அசுத்தமான யமுனை, மாசுபட்ட குடிநீர், சேதமடைந்த சாலைகள், நிரம்பி வழியும் சாக்கடைகள், தெருவுக்குத் தெரு திறந்திருக்கும் மதுபானக் கடைகள் ஆகியவற்றுக்கு” பொதுமக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் பதிலளித்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.
டெல்லி மக்கள் பொய்கள், வஞ்சகம், ஊழல் நிறைந்த கண்ணாடி மாளிகையை அழித்து ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து டெல்லியை விடுவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, “வாக்குறுதிகளை மீறுவோருக்கு டெல்லி பாடம் கற்பித்துள்ளது. இது நாடு முழுவதும் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளிப்போருக்கு ஒரு முன்மாதிரியாக அமையும். இது டெல்லியில் வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வர்க்கத்தினர் ஆம் ஆத்மி மீது அதிருப்தியில் இருந்தனர் – காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் உதித் ராஜ் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய போது, “தற்போது வெளியாகி வரும் முடிவுகள் பாஜகவே டெல்லியில் ஆட்சி அமைக்கும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் செயல்பாடும் மோசமானதாகவே இருந்தது. அதனால் தான் ஆம் ஆத்மியின் வாக்குகள் எங்களுக்கு வந்து சேருவதற்கு பதிலாக பாஜகவின் வாக்குகளாக மாறிவிட்டன,” என்று தெரிவித்தார்.
மேற்கொண்டு பேசிய அவர் மத்திய வர்க்கத்தினர் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். ஏன் என்றால் அவர் பொய்யை பரப்புகிறார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அவரை ஒரு ஏமாற்றுக்காரராக மக்கள் பார்க்கின்றனர்,” என்று கூறினார்.
“ஆம் ஆத்மி கொண்டு வந்த திட்டங்களுக்காகவே அவர்களுக்கு வாக்குகள் கிடைத்துள்ளதே தவிர அவரின் கொள்கைகளுக்காக யாரும் வாக்களிக்கவில்லை. தொழில்முனைவோர்கள், நடுத்தர வர்க்கத்தினர், மேட்டுக்குடியினர், தலித்கள் உட்பட பலரும் அந்த கொள்கைகளை நிராகரித்துவிட்டனர்,” என்று ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி குறித்து பேசினார்.
காங்கிரஸின் தோல்விக் குறித்து பேசிய அவர், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன் கார்கேவை தவிர வேறு யாரும் சமூக நீதி குறித்து பேசுவதில்லை. கள அளவில் யாரும் இது குறித்து பேசவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பிரச்னைகள் இப்போதும் நிலவுகிறது என்றும் அவர் கூறினார்.
இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஒற்றுமையாக செயல்படவில்லை – ஆம் ஆத்மி தோல்வி குறித்து திருமா பேச்சு
மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் ஒற்றுமையாக இல்லை என்றும், பாஜகவின் டெல்லி தேர்தல் வெற்றி தேசத்திற்கான பின்னடைவு என்றும் விமர்சித்துள்ளார்.
“டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகிப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. ஆம் ஆத்மி இந்த அளவு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமானால் அது தேசத்திற்கான ஒரு பின்னடைவாகவே கருத வேண்டியதாக உள்ளது.
நியாயமான முறையில் இந்த தேர்தல் நடைபெற்றிருக்குமா என்ற ஐயத்தை இது எழுப்புகிறது. இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்தத் தேர்தலை சந்திக்கவில்லை.
இந்தியா கூட்டணி தலைவர்கள் இது குறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஈகோ பிரச்னைகளை பின்னுக்குத்தள்ளி விட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் திசை வழியே சிந்திக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
கொண்டாட்டத்தில் பாஜக
பாஜகவினர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் பாஜக தொண்டர்கள் கட்சி அலுவலகங்களில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டங்களை துவங்கினார்கள்.
முந்தைய தேர்தல்
டெல்லியில் 2015 மற்றும் 2020 சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 2015ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 67 இடங்களையும், 2020இல் 62 இடங்களையும் வென்றது.
ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை இழந்தால், அது அக்கட்சிக்கு மிகப்பெரிய தோல்வியாக அமையும். கடந்த பத்தாண்டுகளில், டெல்லி மற்றும் பஞ்சாபில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததன் மூலம், ஒரு தேசிய கட்சியாக உருவெடுத்தது ஆம் ஆத்மி.
2025 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பலவும் பாஜகவே வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தன. ஆம் ஆத்மி இரண்டாம் இடத்திற்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த முறை சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவானது 60.4% மட்டுமே. கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது இது மிகவும் குறைவான வாக்குப்பதிவு.
2013-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 66% வாக்குகள் பதிவாகியிருந்தது. 2015-ம் ஆண்டு தேர்தலில் 67% ஆக வாக்குகள் பதிவாகின. 2020-ம் ஆண்டு தேர்தலில் 63% ஆக வாக்குகள் பதிவாகின. தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவில் 60.4% வாக்குகளே பதிவாகியுள்ளன.
டெல்லி சட்டமன்றத்தில் உள்ள 70 தொகுதிகளில் 12 தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். டெல்லியில் மொத்தம் 1.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 83.49 லட்சம் வாக்காளர்கள் ஆண்கள். 71.74 லட்சம் வாக்காளர்கள் பெண்களாவார்கள்.
கடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களில் நடந்தது என்ன?
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கு எதிராக 2011-ம் ஆண்டு அண்ணா ஹசாரேவுடன் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன. அண்ணா ஹசாரேவுடன் அர்விந்த் கேஜ்ரிவாலும் அந்த போராட்டங்களில் பங்கேற்றார். மேலும் காங்கிரஸை வெளிப்படையாக அவர் விமர்சனம் செய்தார்.
2013-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. 70 தொகுதிகளில் போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸை அர்விந்த் கேஜ்ரிவால் விமர்சனம் செய்தார். இருப்பினும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் ஆதரித்தது. முதல்முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் முதல் அமைச்சரானார்.
2013-ஆம் ஆண்டு தேர்தலில் தான் இறுதியாக பாஜக இரட்டை இலக்கங்களில் தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக அந்த தேர்தலில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் வெகு சில தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
2013-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு ஆம் ஆத்மி 2015 மற்றும் 2020 தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
2013-ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி 29% வாக்கு வங்கியை கைப்பற்றியது. காங்கிரஸின் வாக்கு வங்கி அப்போது 25% ஆக இருந்தது. மேலும் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது பாஜக டெல்லியில் 30%-க்கும் மேல் வாக்கு வங்கியை வைத்திருந்தது. 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2015-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெறும் மூன்றே தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் அதன் வாக்கு வங்கியானது 30%க்கும் அதிகமாகவே இருந்தது. ஆனால் ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் வெற்றி பெற்று 50% வாக்கு வங்கியை தன் வசமாக்கியது.
2020-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. அதன் வாக்கு வங்கி 50%க்கும் அதிகமாகவே இருந்தது. பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஆனால் இந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கூறிக் கொள்ளும்படியான வெற்றியைக் கூட பெறவில்லை.
பகிரவும்: