
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, வியாழக்கிழமை (பிப்ரவரி 13) பிரான்சில் இருந்து அமெரிக்கா சென்று, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார்.
அப்போது இரு தலைவர்களும் எண்ணெய்-எரிவாயு, பாதுகாப்பு, வரிகள், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.
அதன் பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது, இரு தரப்பு வர்த்தகம் மற்றும் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசினர்.
கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராகப் பதவி வகிக்கும் நரேந்திர மோதி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிப்பது இது மூன்றாவது முறை. அவர் ஒருபோதும் தனியாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியதில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டில் ஒரு செய்தியாளர் சந்திப்பில், உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தபோது, அவர் அமித் ஷாவுக்கு அருகில் அமர்ந்திருந்தார். 2023ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் இரண்டு கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக வசிக்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது குறித்தும், அதானி நிறுவனம் மீது அமெரிக்காவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் பிரதமர் மோதி பதிலளித்தார்.
அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா முறைபடுத்தும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்புத் தளவாடங்கள் வாங்குவதில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகக் கூறிய டிரம்ப், எஃப்-35 (F-35) எனப்படும் ஸ்டெல்த் போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்கவும் விருப்பம் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அமெரிக்காவில் அதானி குழும உரிமையாளரும் தொழிலதிபருமான கௌதம் அதானி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோதி பதில் அளித்துள்ளார்.
“அதானி குறித்து டிரம்பிடம் பேசுனீர்களா? அந்த வழக்கில் நடவடிக்கை எடுக்குமாறு டிரம்பை வலியுறுத்தினீர்களா?” என மோதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்பும் மோதியுடன் இருந்தார்.
அதற்குப் பதிலளித்த மோதி, “இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எங்கள் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் என்னவென்றால் ‘உலகமே ஒரு குடும்பம்’ என்பதுதான். நாங்கள் முழு உலகத்தையும் ஒரே குடும்பமாகக் கருதுகிறோம்.”
“ஒவ்வோர் இந்தியருமே எனக்கு முக்கியம் என்று நான் கருதுகிறேன். அதேவேளையில், ஒரு தனிப்பட்ட நபரின் விஷயத்துக்காக இரு நாடுகளின் தலைவர்களும் சந்திப்பதில்லை, ஒன்றாக அமர்ந்து பேசுவதில்லை” என அவர் கூறினார்.
கௌதம் அதானி, அமெரிக்காவில் தனது நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் பெற 250 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்ததாகவும், அதை மறைத்ததாகவும் கடந்த நவம்பர் மாதம் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக, கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் 8 பேர் மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான செய்தியாளர் சந்திப்பின்போது, ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே நடந்து வரும் போர் குறித்தும் பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
ரஷ்யா-யுக்ரேன் மோதலில் இந்தியா நடுநிலை வகித்ததாக மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அது தவறு என்று பிரதமர் மோதி கூறினார்.
“இந்தியா அமைதியையே விரும்புகிறது. இரு தரப்பினரும் (யுக்ரேன் மற்றும் ரஷ்யா) இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்” என்றார்.
ரஷ்யா – யுக்ரேன் இடையே நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் நரேந்திர மோதி கூறினார்.
அப்போது, ரஷ்ய அதிபர் புதினுடனான தனது தொலைபேசி உரையாடல் குறித்தும் டிரம்ப் பேசினார். மேலும் இந்த உரையாடல் யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொடக்கத்தைக் குறிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“ரஷ்யா மற்றும் யுக்ரேனுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக நடைபெற்றது. போரை முடிவுக்குக் கொண்டுவர நல்ல வாய்ப்பு உள்ளது” என்று முன்னதாக தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
முன்னதாக புதன்கிழமை (பிப்ரவரி 12), ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அவரைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோதி, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துக் கொள்வது குறித்தும் பேசினார்.
“இந்த விவகாரத்தில் எங்கள் கருத்து ஒன்றுதான், அதாவது எந்தவொரு இந்தியரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அழைத்துக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
சில புலம்பெயர்ந்தவர்கள், மனிதக் கடத்தல்களில் ஈடுபடுபவர்களால் கொண்டு வரப்படுவதாகவும், தாங்கள் அமெரிக்காவுக்கு தான் அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது என்றும் மோதி கூறினார்.
“இவர்கள் மிகச் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் பெரிய கனவுகள் விதைக்கப்படுகின்றன, அவர்களுக்குப் பெரிய வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.
டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற பிறகு, அமெரிக்கா தனது ராணுவ விமானம் மூலம் ஆவணமற்ற இந்தியர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது.
கடந்த வாரம் இதுகுறித்துப் பேசிய இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “இந்தியர்களை திருப்பி அனுப்பும் செயல்பாட்டின்போது, அவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய இந்திய அரசு அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக” கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, நவம்பர் 26, 2008 மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும், இஸ்லாமிய கடும்போக்குவாதத்தின் அச்சுறுத்தலைத் தடுக்க இந்தியாவும் அமெரிக்காவும் ‘முன்னெப்போதும் இல்லாத வகையில்’ இணைந்து செயல்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
“இந்தியா, அமெரிக்காவின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு மூலம் ஒரு சிறந்த சூழலை உலகில் உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பிரதமர் மோதி கூறினார்.
“இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை, ஜனநாயகம் மற்றும் அரசு நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்துகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக நிற்பதாகவும் பிரதமர் மோதி தெரிவித்தார்.
“இந்தியா எந்த அளவுக்கு அமெரிக்கா மீது இறக்குமதி வரி விதிக்கிறதோ, அதே அளவு வரி இந்தியா மீதும் விதிக்கப்படும்” என்று பரஸ்பர வரி விதிப்பு குறித்து அதிபர் டிரம்ப் பேசினார்.
வரிகள் தொடர்பாகப் பேசும்போது, “எங்கள் எதிரிகளைவிட எங்கள் கூட்டாளிகள் மோசமானவர்கள்” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் எனக் கூறிய டிரம்ப், “அவை நம்மிடம் அதிகமாக உள்ளன. இந்தியாவில் அதற்கான தேவை உள்ளது” என்று குறிப்பிட்டார்.
“இந்தியாவின் எரிவாயு பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் நாங்கள் கவனம் செலுத்துவோம்,” எனக் கூறிய பிரதமர் மோதி, அணுசக்தியில் அதிக முதலீடுகளை மேற்கொள்வது குறித்தும் உறுதியளித்தார்.
அப்போது, “பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க உள்ளோம். எஃப்-35 ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவோம்” என்று டிரம்ப் தெரிவித்தார்
பகிரவும்: