
இலங்கையின் மன்னார் பகுதியில் முன்னெடுக்கப்பட இருந்த காற்றாலை மின்சார திட்டத்தைக் கைவிட அதானி நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன் பின்னணியில், இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய மற்றும் இலங்கை தரப்பினர் இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்த தீர்மானித்துள்ளனர்.
காற்றாலை மின் திட்டத்தைக் கைவிட தீர்மானம்
மன்னாரில் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட காற்றாலை மின்சார திட்டத்தைக் கைவிட தீர்மானித்துள்ளதாக இந்தியாவின் அதானி நிறுவனம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறவுள்ளதாக இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜீன் ஹேரத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தினால் இந்தத் திட்டத்தை மீள் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமையினால் இந்தத் திட்டத்தில் இருந்து வெளியேறத் தீர்மானித்ததாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பகுதியில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8,700 கோடி) முதலீட்டில் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
காற்றாலை மின் திட்டத்தை அதானி குழுமம் கைவிட்டது ஏன்?
மன்னார் காற்றாலை மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பல அனுமதிகள் கிடைத்துள்ள போதிலும், சுற்றாடல் ஆய்வு அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினால், இந்த அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, திட்டத்தில் இருந்து வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து அரசாங்கத் தரப்புடன் கடந்த இரண்டு வருட காலமாக கலந்துரையாடல்களை நடத்தியிருந்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 484 மெகாவாட் திட்டமாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்தத் திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவுடன் 14 தடவைக்கும் அதிகமான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை, வரி விலக்குக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுக் கொள்கின்றமை தொடர்பில் அனைத்து விடயங்களும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதானி கிரீன் நிறுவனத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் காற்றாலை மின்சார திட்டம் தொடர்பான கட்டமைப்பு உள்ளிட்ட முன்னோடி நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அண்மித்த தொகை செலவிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தமது நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு அதிகாரிகள் மின்சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த உத்தேச திட்ட யோசனை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு மற்றும் திட்டக் குழு மீண்டும் நியமிக்கப்பட்டமையினால், இலங்கையின் சுயாதீன உரிமைக்கு மதிப்பளித்து அந்தத் திட்டத்தில் இருந்து வெளியேற தமது நிறுவனத்தின் பணிப்பாளர் குழு தீர்மானித்துள்ளதாக அதானி நிறுவனம் குறிப்பிடுகின்றது.
தமது நிறுவனம் எப்போதும் இலங்கைக்காக நிற்கும் என்றும், மீண்டும் அபிவிருத்தி வாய்ப்புக்காக இலங்கை அரசாங்கம் விடுக்கும் அழைப்பை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் நிறுவனத்தின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதா?
அதானி கிரீன் நிறுவனம், மன்னார் காற்றாலை மின்சார திட்டத்தில் இருந்து வெளியேறுகின்றமை தொடர்பில் இதுவரை மின்வலு அமைச்சுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம்.உதயங்க ஹேமபால தெரிவிக்கின்றார்.
”எமக்கு இதுவரை அறிவிக்கவில்லை. அதானி நிறுவனம் முதலீட்டு சபைக்கு இந்த அறிவிப்பை அனுப்பியுள்ளது. நானும் அந்தக் கடிதத்தைக் கண்டேன். அது முதலீட்டு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம். முதலீட்டு சபையினால் எமக்கு அறிவிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், அந்த நிறுவனத்தினால் எமக்கு அறிவிக்கப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் அதிகாரப்பூர்வமாக எதையும் கூற முடியாது” என்று அமைச்சின் செயலாளர் கூறுகின்றார்.
இலங்கையில் அதானி குழுமத்தின் மற்ற முதலீடுகளின் நிலை என்ன?
மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் 500 மெகாவாட் காற்றாலை மின்சார திட்டத்தை முன்னெடுக்க அதானி நிறுவனம் இலங்கை அரசாங்கத்துடன் கையெழுத்திட்டுள்ளது.
மேலும், கொழும்பு துறைமுக நகர் கொள்கலன் முனையத்தை ஒன்றிணைந்த வகையில் அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்காக இலங்கை அரசாங்கத்துடன் அதானி நிறுவனம் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி கையெழுத்திட்டது.
இந்தத் திட்டத்தின் ஊடாக 51 சதவீத பங்குகள் அதானி நிறுவனத்திற்கு கிடைக்கப் பெறவுள்ளன. அதானி நிறுவனத்தின் இலங்கை முகவரான ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கு 34 சதவீத பங்குகளும், இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 15 சதவீத பங்குகளும் உரித்தாகின்றன.
இந்தத் திட்டத்திற்காக 700 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படவுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையில் முந்தைய ஆட்சியாளர்களால் அதானி நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் புதிய அரசாங்கம் பதவியேற்ற பிறகு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதானி மின் திட்டத்திற்கு எழுந்த எதிர்ப்புகள்
அதானி நிறுவனத்தினால் இலங்கையில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்ட காற்றாலை திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
குறிப்பாக மன்னார் பகுதியில் உத்தேசிக்கப்பட்ட திட்டத்திற்கே இவ்வாறு எதிர்ப்புகள் எழுந்திருந்தன. வலசைப் பறவைகளின் வருகைக்கு இந்தத் திட்டத்தின் ஊடாகப் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாக சூழலியலாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
மன்னார் வழியாகவே இந்த வலசைப் பறவைகள் நாட்டிற்குள் வருகை தருவதாகக் கூறப்படுகின்றது. 30 நாடுகளைச் சேர்ந்த பறவைகள் இலங்கைக்குள் வருகை தருவதுடன், ஓராண்டுக்கு சுமார் 15 மில்லியன் பறவைகள் வருவதாகக் கூறப்படுகின்றது.
அத்துடன், மன்னார் கரையோரப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் அந்தப் பகுதி மீனவர்கள் குறிப்பிட்டனர்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய போது, எந்தவொரு காரணத்திற்காகவும் காற்றாலை மின்சார திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் அமைக்க இடமளிக்க மாட்டோம் என்று கூறினார் மன்னார் மாவட்ட மீனவ சங்கத்தின் தலைவர் ராஜா குரூஸ்.
காற்றாலை திட்டத்தினால் மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றமையினால், இந்த திட்டத்திற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை சந்தியோ மார்கஸ், பிபிசி தமிழிடம் சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
”இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கனவே 30 காற்றாலைகள் பொருத்தப்பட்டுள்ளன. அது பல்வேறு பாதிப்புகளை மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் எதிர்நோக்கிய சிரமங்களை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளோம். அதனை நிவர்த்தி செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கு பின்னர் காற்றாலை மின் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளோம்.” என்று அவர் தெரிவித்தார்.
பகிரவும்: