
04.03.2025
பெங்களூரு
தெரு நாய்க்கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.
மாநிலத்தின் பல பகுதிகளிலும் தெரு நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை. தெரு நாய்கள் வெயில் காலத்தில் வெறி பிடித்து அலைகின்றன. இதன் காரணமாக, சாலையில் செல்லும் பலரை கடித்து குதறுகின்றன. இதில் குழந்தைகளே அதிகம்.
நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தும், தெரு நாய்களின் தொல்லை குறைந்த பாடில்லை. நாய்கள் கடிப்பதால் ஏற்படும் ரேபிஸ் எனும் நோயால் பலர் பாதிக்கப்படுகின்றனர்; சிலர் இறந்தும் போகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு மாநில சுகாதாரத்துறையின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு குழு ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுகளின் முடிவுகள், சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
இந்த முடிவுகளின்படி முந்தைய 2023ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024ல் நாய்க்கடியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 975 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி வரையிலான எண்ணிக்கையே மிரட்டும் வகையில் உயர்ந்துள்ளது.
இரண்டு மாதங்களில் அதிகபட்சமாக விஜயபுராவில் 4,452 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாநிலத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக பெங்களூரில் 4 பேர் இறந்துள்ளனர்.
நாய்க்கடியால் பெங்களூரில் கடந்த ஆண்டு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையே 16 ஆகும். அப்படி இருக்கையில், இந்த ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுகாதாரத்துறையின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட இயக்குனர் அன்சார் கூறியதாவது:
ஒவ்வொரு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பதிவாகும் நாய்க்கடி வழக்குகள் குறித்து சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்படுகின்றன. அனைத்து நாய்க்கடி வழக்குகளும் வெறிநாய்க்கடியாக கருதப்படுவதில்லை.
இருப்பினும், நாய் கடித்தால், மருத்துவமனைக்கு வந்து டாக்டரின் அறிவுரைப்படி நடக்க வேண்டும். காயம் ஏற்பட்ட பகுதியை சுத்தமாக வைக்கவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பகிரவும்: