
05.03.2025
புதுடில்லி
ஆந்திராவில் உள்ள பல்கலைகளில் பல மொழி கற்பிக்கும் மையங்களை ஏற்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக டில்லி சென்றுள்ள அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
டில்லியில் முகாமிட்டுள்ள ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மாநில திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: இன்று மிக முக்கிய 3 சந்திப்புகள் நடைபெற்றது. அதில், ஒன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தான். இரு கட்சிகளின் இடையே நடக்கும் வழக்கமான சந்திப்பு தான் இது. எங்களின் யோசனைகளை பரிமாறிக் கொண்டதுடன், என்.டி.ஏ., கூட்டணியின் அடுத்தகட்ட செயல்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினோம். அதேவேளையில், நில அபகரிப்பு (தடை) சட்ட மசோதா, கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தில் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. நில அபகரிப்பு மற்றும் அது தொடர்பான மனுக்களும் பெரும் சவாலாக இருக்கின்றன.
குஜராத் மாநிலத்தில் இதனை சிறப்பாக அமல்படுத்தியுள்ளனர். தற்போது ஆந்திர சட்டசபையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது, இதற்கு ஒப்புதல் பெறுவதற்காக டில்லிக்கு வந்துள்ளோம். விரைந்து இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கொள்கிறேன், இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: ஒவ்வொருவரும் மக்கள் தொகை எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்த வேண்டும். தொகுதி மறுவரையறை செய்வது தொடர்பாக தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதனை எப்படி கணக்கிடுவது என்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால், இது தாமதமான ஒன்று. சரியான நேரத்தில் இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்யும் என்று நம்புகிறேன்.
உலகளாவிய வாய்ப்புகளுக்கு ஏற்ப அனைவரும் பல மொழிகளை கற்றுக் கொள்வது அவசியமாகிறது. எங்கள் மாநிலத்தில் உள்ள பல்கலைகளில் பல மொழி கற்பிக்கும் மையங்களை ஏற்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறேன், என்றார்.
பகிரவும்: