
மருத்துவ படிப்பில் 75 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்படும்| பிரதமர் மோடி
05.03.2025
புதுடில்லி
” அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவத்துறையில் 75 ஆயிரம் இடங்கள் இடங்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது,” என பிரதமர் மோடி கூறினார்.
பட்ஜெட்டிற்கு பிந்தைய வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பான இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், இந்தியாவின் எதிர்காலத்திற்கான வரைபடமாக அமைந்துள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறைக்கு முதலீட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. பொருளாதாரம், திறன் மேம்பாடு மற்றும் புதுமையான முன்னெடுப்புகளுக்கும் அதேமாதிரியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., ஆராய்ச்சிக்காக தேசிய அளவில் பெரிய மொழி மாதிரி( Large Language Model -LLM) ஆய்வகம் அமைக்கப்படும். இந்த துறையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். சுற்றுலாத்துறை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும்.
கல்விக் கொள்கை
பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் கல்வி அமைப்பு பெரிய அளவில் மாற்றங்களை சந்தித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை, ஐஐடி.,க்கள் விரிவாக்கம், கல்வி அமைப்பில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது, ஏஐ.,யின் முழு ஆற்றலையும் பயன்படுத்துவது, பாடப்புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்குவது, பாடங்களை 22 இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வது என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
2014க்கு பிறகு 3 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐ.டி.ஐ.,க்களை மேம்படுத்துவதுடன், திறமைக்கான மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. தொழில்துறைக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என திட்டமிட்டு உள்ளோம். இந்த பட்ஜெட்டில், மருத்துவ படிப்பில் கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவ துறையில் 75 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பகிரவும்: