
தமிழர்களின் இறையாகிய முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு என்ற பெருமைக்குரிய வழிபாட்டுத்தளம் “திருப்பரங்குன்றம்” ஆகும். திருப்பரங்குன்றம் எனும் இந்த முருகனின் மலைக்கோயிலுக்கு பின்னே உள்ள வரலாறு என்பது நீண்ட நெடியது. தமிழர் வரலாற்றைக் காட்டுகின்ற கண்ணாடியாக விளங்குகின்ற சங்க இலக்கியங்களில் பரிபாடல், புறநானூறு மற்றும் திருமுருகாற்றுப் படை போன்ற நூல்களில் பெரிதாகப் பதிவுசெய்யப்பட்டது இந்த திருப்பரங்குன்றம் என்கின்ற வழிபாட்டுத்தளமாகும். எனவே தமிழர் வரலாற்றின் தடத்தின்படி, இது தமிழர் இறை முருகனுக்கு உரிய மலை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கப் போவதில்லை.
சிக்கந்தர் மலை வரலாறு போக்கினை பார்க்கும் போது, மதுரையை ஆண்ட பாண்டியர்கள் தங்களுக்குள் எழுந்த உட்பகையின் காரணமாக அலாவுதீன் கில்ஜியின் ஆட்சி 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திடல் இங்கு உருவாக்கிட காரணமாக அமைந்தது. அதன்பிறகு பாண்டியர்கள் தன்னுடைய நிலத்தை மீட்க, மீண்டும் மதுரையை நோக்கி படையெடுத்து வரும்போது. சிக்கந்தர் பாதூர்ஷாவை எதிர்கொள்ள நேரிட்டது. போரில் பாதூர்ஷாவின் படைகளை வென்ற பாண்டிய மன்னனின் படை, சிக்கந்தர் பாதூர்ஷாவை தேடி அலைந்தது. அப்போது போரில் இருந்து அமைதியை வேண்டிய சிக்கந்தர் பதூர்ஷா திருப்பரங்குன்றம் மலையின் குகையில் பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தபோது கொல்லப்பட்டார். அதாவது சிக்கந்தர் என்ற மன்னனை வழிபட 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தர்க்கா அமைக்கப்பட்டது.
இன்றைய நிலையில் இந்த திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் ? என்ற பிரிவினை வாதக் கேள்விகள் உள்நோக்கத்தோடு கேட்கப்பட்டவை என்பதை தாண்டி, இந்த மலை எந்த ஒரு தனித்த கட்சிக்கோ அல்லது வழிபட்டு அமைப்பு முறைக்கோ சொந்தமானது இல்லை, இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் உரிய இடம். இன்று தர்காவில் வழிபடக் கூடிய நமது இஸ்லாமிய சொந்தங்கள் அரேபியாவில் இருந்து வந்தவர்கள் இல்லை, நமது அமைப்புமுறையில் தன்னுடைய வழிபாட்டு முறைகளை மாற்றிக்கொண்டத் தமிழர்கள். இந்த புரிந்துணர்வோடு அரசு இதை அணுகவேண்டிய அவசியம் இருக்கிறது.
திருப்பரங்குன்றம் கோயிலுக்கும், சிக்கந்தர் தர்க்காவிலும் உள்ள வழிபாட்டு முறை திடீரென்று தோன்றியவையே, அல்லது திடீரேற்று தொடங்கப்பட்டவையோ இல்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மக்களின் பழக்கவழக்கம் மற்றும் பண்பாட்டின் படி ( Customs and Culture ) என்ன முறை பின்பற்றப்பட்டு வந்தது என்பது அரசுக்கு நன்றாக தெரியும். மேலும் அதற்கு என்று ஒரு அமைச்சகத்தையும், அமைச்சரையும் போட்டிருக்கும் அரசுக்கு இந்த சிக்கலை கையாள்வதில் என்ன பிரச்னை என்ற கேள்வி எழுகிறது.
இந்த சிக்கல் உருவான போதே இதற்கான தீர்வை நோக்கி நகர்த்தாத அரசு ஒரு பக்கம் தன்னுடைய கூட்டணி கட்சியின் எம்பி நவாஸ் கனியை அனுப்பி சிக்கலை உருவாக்கியதும், அதற்கு பதில் தருகிறோம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவார கும்பல்கள் எதிர்வினை ஆற்றுவதும், இந்த அரசு வேண்டுமென்ற சிக்கலை உருவாக்கி குளிர்காய நினைக்கிறதோ என்ற ஐயம் வருகிறது.
திருப்பரங்குன்றம் என்ற மலையானது தமிழர்களுக்கு உரியது. தமிழர் வரலாற்றில் முருகனை வணங்குகின்ற தமிழர்கள், தன்னுடைய வழிபாட்டு முறையில் மாற்றம் கண்டு தர்காவை வணங்குகின்ற தமிழ் இஸ்லாமியர்களுக்கும் உரியது. இந்த சூழலில் ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார ஆட்கள் இது இந்துக்களுக்கு உரியது என்றோ, அதேபோல மக்களிடம் ஒரு நல்லிணக்கம் உருவாக எப்போதும் தடையாக இருக்கும் திராவிடத்தின் ஊது குழலாக சேவை செய்கின்ற தனித்த இஸ்லாமிய கட்சிகளுக்கோ, அதன் தலைமைகளுக்கோ உரியது இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த சிக்கலில், இரு தளங்களின் வழிபாட்டு முறையில் இருக்கின்ற முக்கிய தலைவர்களை அழைத்து பேசி, முன்பு என்ன முறைகள் பின்பற்றப்பட்டு வந்ததோ அதை தொடர்வதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி கோரிக்கை வைக்கிறது. இந்த சிக்கலில் பக்குவமற்று நடந்துகொள்ளும் திமுக அரசையும், அமைச்சர் சேகர்பாபுவையும் வன்மையாக கண்டிக்கிறது வீரத்தமிழர் முன்னணி.
வீரத்தமிழர் முன்னணி
தமிழர் நாடு 05-02-2025



பகிரவும்: